இன்று பல இணையதளங்களில் தெய்வ நம்பிக்கை ஏளனமாக சித்தரிக்கப்படுகிறது. கடவுள் உண்டு என நம்புபவர்கள் அடிப்படை அறிவு இல்லாதவர்கள், சரித்திரம் தெரியாதவர்கள், அறிவியல் ஞானமே இல்லாத பழமைவாதிகள் என பல்வேறு ஏளனங்கள் சுற்றி சுற்றி வளம் வருவதைக் காணலாம். நான் ஒரு நாத்திகன் என சொல்லிக் கொள்வதும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை கேலி செய்வதும் ஒரு ஃபேஷனாக மாறி வருகிறது. இதனை நீங்களே அறிந்திருப்பீர்கள்.
மக்கள் கடவுள் நம்பிக்கையைப் புறக்கணிப்பது ஏன்?
1) இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்ள:
ஏனெனில் தெய்வ நம்பிக்கைகள் தீய செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றன. பொறாமை, பொய், கோபம், விபச்சாரம், ஓரினச் சேர்க்கை, இச்சை, கலியாட்டம், கூத்து என மனிதன் விரும்பும் பல செயல்களை இறைநம்பிக்கை வெறுக்கிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பரலோகத்தை சென்றடைவதில்லை, அவர்களுக்கு எரிகிற நரகமே அளிக்கப்படும் என மார்க்கங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல், வாழ்நாட்களிலேயே அத்தகைய தீய செயல்களில் ஈடுபடுவோரை சமுதாயத்தில் இழிவானவர்களாகக் காணச் செய்கிறது. "நான் விபச்சாரத்தில் ஈடுப்பட்டவன், கொலை செய்தவன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவன், திருட்டுத் தொழில் செய்தவன்" என யாராலும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. அப்படி ஒருவன் தன்னைக் குறித்துச் சொல்லும் போது அவன் அருவருக்கப்பட்டவனாக சமுதாயத்தில் காணப்படுகிறான். இதற்கு முதல் காரணம் இறைநம்பிக்கைகள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்களே. இச்சை, கொலை, களவு என பல செயல்களை அருவருப்பான செயல்களாக இறைநம்பிக்கை மாற்றிவிட்டது, தெய்வ நம்பிக்கை உள்ளவரை இந்த எண்ணங்கள் மக்கள் மனதை விட்டு போகாது, மனிதனால் அவன் விரும்பிய இச்சைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாது. தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் மனிதன் இறைநம்பிக்கையை வெறுக்கிறான், தன் இச்சைகளுக்குத் தடை விதிக்கும் இறைநம்பிக்கையை புறந்தள்ளுகிறான், தன் இச்சையான செயல்களை அருவருப்பாக்கி சமுதாயத்தில் தன்னை இழிவடுப்படுத்தும் இறைநம்பிக்கையை அடியோடு பிடுங்க முயற்சிக்கிறான். இது முதல் காரணம்.
2) மூட நம்பிக்கைகளை களையெடுக்க:
இறைநம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் பலவற்றிற்கும் வழி வகுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு நரபலி, தீண்டாமை, சாதிக் கொடுமை, வன்முறை, போலி ஆன்மீகவாதிகள் என பல தீமைகளுக்கும் நிச்சயமாக இறை நம்பிக்கைகள் வழி வகுத்திருக்கின்றன. உண்மைகளை ஆராய்ந்து உணராமல் கண்மூடித்தனமாக தங்கள் நம்பிக்கைகளை மக்கள் நம்பியதே இதன் காரணம். மக்களிடம் உள்ள அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை வஞ்சித்த போலி ஆன்மீகவாதிகள் பலரை உலகம் முழுவதும் காணலாம். இதனால் சமுதாயத்தில் இருந்து இறைநம்பிக்கையை அடியோடு பிடுங்க எழுந்த சீர்த்திருத்த தலைவர்கள் ஏராளம். பெரியார் இதற்கு நல்ல உதாரணம்.
3) சோர்ந்து போனவர்கள்:
இறைநம்பிக்கையில் தளர்ந்து போனவர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறாமல் போனதை நினைத்து மனங்கசந்து இறைவனை புறந்தள்ளினர்வர்கள் இல்லாமல் இல்லை. தங்கள் வாழ்வில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களுக்கு இறைவனே காரணம், அவர் தங்களுக்கு உதவாததே அதற்கு காரணம் என நொந்து போனவர்கள் உண்டு. பரிணாமக் கொள்கையைக் கொண்டு வந்த சார்லஸ் டார்வின் இதற்குச் சான்றாய் நிற்கிறார். தன் அன்பு மகள் மரணப்படுக்கையில் விழுவதற்கு முன்பு வரை தேவாலயத்திற்குச் சென்றவர் அவர். தன் வேண்டுதலுக்கு பலன் இல்லாமல் தன் மகள் இறந்த போது டார்வின் துவண்டு போனார். அதுமுதல் இறை நம்பிக்கையை கைவிட்டு நாத்திகத்தை ஏற்றுக் கொண்டார்.
4) தேடி தேடி அழுத்துப் போனவர்கள்:
இறைவனைத் தேடித் தேடி அழுத்து போனவர்கள் நாத்திகத்தை ஏற்கின்றனர். கடவுள் உண்டு என நிச்சயமாக நம்பி அவரைத் தேட முயன்று, வேதங்களை இரவும் பகலும் புறட்டிப் பார்த்து வரலாற்று ஆதாரங்களைத் தேடி இறுதியில் குழம்பிப் போகின்றனர். தங்கள் குழப்பத்தில் இருந்து விடுதலைக் கிடைக்க இறைநம்பிக்கையை கடைசியாக கைவிடுவார்கள். இத்தகைய மக்களை நீங்களே கண்டிருப்பீர்கள்.
5) கேலி கிண்டல்களுக்கு பயந்து:
நான் இறை நம்பிக்கை உள்ளவன் என சொன்னால் என் நாத்திக நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள், என்னை பழமைவாதி என கேலி செய்வார்கள், எனக்கு மரியாதை மதிப்பு கிடைக்காது என நினைத்து பயந்து நாத்திகத்தை ஏற்கும் வாலிபர்களைத் தினம் தினம் பார்க்கலாம்.
6) பரவி வரும் புது டிரண்டு:
இது மிகவும் வருத்தமான கேட்டகரி. அதாவது எப்படி போலி ஆன்மீகவாதிகளை நாம் காண்கிறோமோ, அதே போல போலி நாத்திகர்களும் உள்ளனர். போலி நாத்திகர் என்றால் இறை நம்பிக்கை கொண்டவர்கள், எதாவது ஒரு மார்க்கத்தைத் தங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருப்பார்கள், அது போல எதாவது ஒரு மார்க்கத்தின் மேல் அளவில்லாத கசப்பைக் கொண்டிருப்பார்கள். தங்கள் கசப்பைக் கொடித் தீர்க்க ஒரு வலைப்பூ ஆரம்பித்து, அந்த மார்க்கத்தைக் கட்டுக்கதை, பொய் என ஏளனமான பல சொற்களைச் சொல்லி ஏசுவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை என்ன என்று அந்த பக்கத்தில் எந்த தகவலும் இருக்காது. இது ஒருவிதத்தில் நல்ல வசதி தான்! ஏனென்றால் தன் நம்பிக்கை என்ன என்று தான் சொல்லும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் தன் நம்பிக்கையைக் குறித்து கேள்வி எழுப்புவார், அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலை வரும் என பயந்து தங்கள் நம்பிக்கை என்ன என்று கூறாமல் குறிப்பட்ட ஒரு மார்க்கத்தை மட்டும் இகழ்ந்து வருவார்கள். உங்கள் நம்பிக்கை என்ன என எவராவது கேட்கும் போது பதில் சொல்ல மாட்டார்கள், விடாமல் அவரிடம் கேட்க நேர்ந்தால் "நானொரு நாத்திகன்" என பதில் வரும். நாத்திகன் குறிப்பிட்ட ஒரு மார்க்கத்தை மட்டும் இகழமாட்டான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் தான் போலி நாத்திகர்கள். இந்த புது டிரண்டு குறிப்பாக தமிழ் வலையில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது...!
சரி, இதற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்?
உண்டு, மேலே உள்ள அத்தனை காரணங்களுக்கும் அப்பாற்ப்பட்டது தான் இறை நம்பிக்கை. எப்படி?
இறைநம்பிக்கை என்பது என்ன?
இறை நம்பிக்கை என்பது கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம் என்ற மார்க்கங்கள் அல்ல. மார்க்கம் என்பது வேறு, இறைநம்பிக்கை என்பது வேறு. "இறைவன் உள்ளார்" என திட்டமாக நம்புவது தான் இறைநம்பிக்கை. எல்லாவற்றிலும் இறைவனே காரணம், கண்களால் காணப்படுபவை, காணப்படாதவை என எல்லாவற்றையும் படைத்தவர் உண்டு. நம் புத்திக்கு எட்டாத ஒரு சக்தி உள்ளது, அந்த சக்தி இயற்கைக்கு அப்பாற்பட்டது என நம்புவதே இறை நம்பிக்கை. மார்க்கம் என்பது அந்த இறைவனை அண்டிச் சேர நாம் என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொரு மக்களிடையே விளங்கி வரும் நம்பிக்கைகள். எனவே இறைநம்பிக்கையையும், மார்க்கத்தையும் ஒன்றாக நினைத்துக் குழம்ப வேண்டாம். இறைநம்பிக்கை என்பது முற்றிலும் வேறு.
ஏன் இறைநம்பிக்கையையும் மார்க்கத்தையும் பிரித்துப் பார்க்கிறோம்?
மேலே உள்ள அத்தனை காரணங்களும் மார்க்கத்தோடு மட்டுமே தொடர்புடையவை. இறைவனை மறுக்க மக்கள் கூறும் காரணங்கள் எல்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவையே, மார்க்கங்களின் மேல் வெறுப்புக் கொண்டே இறைவனையே நாத்திக மக்கள் புரந்தள்ளுகிறார்கள். ஒரு நாத்திகரோடு விவாதம் நடக்கும் போது, இத்தகைய கேள்விகள் எழும்பும், "கடவுள் உண்டு என்றால் அந்த கடவுளை எனக்குக் காட்டு, ஒரு அற்புதம் செய்து காட்டு, உன் வேத நூலில் உள்ள இந்த கதை பொய், அதற்கு ஆதாரமில்லை, இந்த வசனம் மக்களுக்குள் தீண்டாமையை ஊக்குவிக்கிறது" என பல கேள்விகளை எழுப்புவார். இந்த கேள்விகள் எல்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவையே. அக்கேள்விகளுக்கும் இறை நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் இறை நம்பிக்கையை இதுவரை யாராலும் மறுக்க முடியவில்லை.
எதனால் இறை நம்பிக்கையை மறுக்க முடியவில்லை?
ஒரு நாத்திகரோடு இறைவனைக் குறித்து வாதாடும் போது, இவ்வாறு நிகழ்வதைக் காணலாம்,
நீங்கள்: இறைவன் இல்லை என்றால் இந்த பூமி, ஆகாயம், சூரியன், கோள்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன? எப்படி எல்லா பொருள்களும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது? நம் உடல் முதற்கொண்டு எல்லா காரியங்களும் ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டது போல தெரிகிறதே!
நாத்திகர்: முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த வெப்பக் குவியல் ஒன்று வெடித்துச் சிதறியது, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தன. அவ்வாறு பூமி சரியான இடத்தில் விழுந்து சரியான தட்ப வெப்ப நிலைகளைப் பெற்றது. அதனால் அதில் உயிர் உண்டாக வாய்ப்பு பிறந்தது. அப்போது பூமியில் இருந்த நீரில் ரசாயன மாற்றங்கள் நடந்தது, தானாக நுண்ணுயிரி வந்தது, அந்து நுண்ணுயிரி கொஞ்சம் பெரிதானது, இன்னும் கொஞ்சம் பெரிதானது, அப்படியே புழுவானது, புழு காலப்போக்கில் மீனானது, மீன் தவளையாகி, தவளை முதலையாகி, முதலை பறவையாகி, பறவை குரங்காகி, குரங்கு மனிதானது.... இதுதான் அறிவியல் உண்மை.
நீங்கள்: சரி அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீங்கள் கூறிய முதல் வெப்பக் குவியல் எங்கிருந்து வந்தது?
நாத்திகர்: வானத்தில் இருந்த துகள்கள் எல்லாம் ஒன்றினைந்தே அந்த குவியல் வந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள்: இந்த செய்தியும் "இருக்கலாம்" என்ற யூக கோட்பாடு தான். அந்த வானம், அதிலிருந்த துகள்கள் எல்லாம் எப்படி வந்தன?
நாத்திகர்: இதற்கு அறிவியல் விரைவில் பதில் சொல்லும்.
நீங்கள்: எத்தனை தூரம் பின் சென்றாலும் அவைகளுக்குப் பின் ஒரு சக்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த படைப்பாற்றல் தான் இறைவன். முதலும் முடிவுமற்ற சக்தி, "எல்லா பொருளுக்கும் முதல் உண்டு முடிவு உண்டு" என்ற இயற்கை விதிக்கு அப்பாற்ப்பட்ட சக்தி தான் அந்த இறைவன்.
நாத்திகர்: அப்படியென்றால் அந்த கடவுளை எனக்குக் காட்டு, ஒரு அற்புதம் செய்து காட்டு, உன் வேத நூலில் உள்ள இந்த கதை பொய், அதற்கு ஆதாரமில்லை, இந்த வசனம் மக்களுக்குள் தீண்டாமையை ஊக்குவிக்கிறது... இன்னும் சொல்லட்டுமா?
மீண்டும் அந்த நாத்திகர் இறை நம்பிக்கையை விட்டு மார்க்கத்தின் பக்கம் தன் வாதத்தை திசை திருப்புவதைப் பார்க்கலாம். இதன் காரணமாகவே இறை நம்பிக்கை இன்றும் மறுக்கப்பட முடியாமல் உள்ளது. இனி வாதம் எவ்வாறு தொடர்கிறது என காணலாம்,
நீங்கள்: நண்பா, உடனே மார்க்க நம்பிக்கைகள் பக்கம் திசை திரும்பிவிட்டாயே, எல்லாவற்றிற்கும் மிஞ்சிய முதலும் முடிவும் அற்ற ஒரு ஆற்றல் உண்டு என்பதை எப்படி மறுக்கப் போகிறாய்? மார்க்கத்தின் பக்கம் திசை திரும்பாமல் இறை நம்பிக்கைக்கு முதலில் பதில் சொல்...
நாத்திகர்: ...........???? அந்த கடவுளைப் படைத்தவர் யார்?
நீங்கள்: உனக்கு விளங்கவில்லையா? "எல்லா பொருளுக்கும் முதல் உண்டு முடிவு உண்டு" என்ற இயற்கை விதிக்கு அப்பாற்ப்பட்ட சக்தி தான் இறைவன் என சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடவுள் என்கிற சக்தி உண்டு, இயற்கை விதியை அது மீறுவதால் அது இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்தி. நீ இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை என்பவன், எனவே அத்தகைய சக்தி இல்லாமல் எப்படி எல்லாமே வந்தது என சொல்ல வேண்டியது உன் கடமை. அதை ஏன் உன்னால் செய்ய முடியவில்லை???
நாத்திகர்: ?????????????????????????????........?
(வாதம் முடிந்தது...)
உண்மையான அறிவு இறைவன் உள்ளார், நமக்கு பின்னால் நம்மை படைத்த ஏதோ ஒரு சக்தி உள்ளது என நம்புவதே. "இறைவன் உள்ளார்" என கூற நீங்கள் வெட்கப்படவே தேவையில்லை. இறைவன் உள்ளார் என்பதை லாஜிக்கோடு சிந்திப்பவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். இங்கு இறைவன் என நாம் கூறுவது நம் சிந்தனைக்கு புலப்படாத ஒரு சக்தி, அத்தனை காரியங்களையும் படைத்த ஒரு ஆற்றல். நிச்சயமாக அத்தகைய சக்தி ஒன்று இருந்தாகவே வேண்டும்.
இப்பதிவின் மூலம் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது இதுதான், இறை நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை இல்லை, அது உண்மையான அறிவு, அதனைக் குறித்து இதுவரை எவராலும் மறுப்புச் சொல்ல முடியவில்லை. மறுப்புச் சொல்வதாக கூறுபவர்கள் மார்க்கத்தைக் குறித்துத் தான் கேள்வி எழுப்புவார்கள், இறைநம்பிக்கைக்கும் மார்க்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்து அவர்களிடம் தெளிவில்லை என்பதை மேலே காணலாம்.
எனவே, நாத்திகர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமோ, காரணமோ ஒன்றுமே இல்லை. நீங்கள் அவரிடம் பேசும் போது அவரது வார்த்தைகள் எல்லாம் உங்கள் மார்க்கத்தைக் குறித்து கேள்வி எழுப்புவதாகவே இருக்கும், மாறாக இறைநம்பிக்கைக்கும் படைப்பாற்றலுக்கும் அவர் எவ்வித மறுப்பும் சொல்ல முடியாதவராகவே இருப்பார். இது உலகறிந்த உண்மை. ஆக, எந்த நாத்திகரிடம் பேச ஆரம்பித்தாலும், முதலில் இறை நம்பிக்கைக்குப் பதில் சொல்ல சொல்லுங்கள்... அதை அவர் விளக்க முடியாத பட்சத்தில் ஏன் அவர் கூற்றை அறிவுப்பூர்வமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கேளுங்கள்...! அந்த நண்பர் நமக்கும் மிஞ்சிய ஆற்றல் ஒன்று உண்டு என்பதை நிச்சயமாக அறிந்துக் கொள்வார்.
அடுத்து, மார்க்கம் பற்றி:
இறை நம்பிக்கை அறிவுப்பூர்வமானது, இயற்கைக்கு மிஞ்சிய சக்தி உள்ளது என்பதை மனப்பூர்வமாக நம்பலாம்.
ஆனால் அந்த சக்தி என்ன? அது உணர்வில்லாத எதாவது ஒரு ஆற்றலா? அல்லது நம்மைப் போல அன்பு, பாசம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுள்ள ஒரு நபரா? உணர்வுள்ள நபர் என்றால் அவர் யார்? அவர் நல்லவரா கெட்டவரா? அவர் எதற்காக நம்மைப் படைத்தார், பிறப்பு இறப்பு என்றால் என்ன? பிறப்புக்கு முன்பு நாம் எங்கிருந்தோம், இறந்த பின் எங்கே போவோம்? உயிர் என எதாவது உள்ளதா? வாழ்க்கையின் பொருள் என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிப்பது தான் மார்க்கம்.
கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம், யூதம், சமணம், புத்தம்... என ஒவ்வொரு மார்க்கங்களும் ஒவ்வொரு விளக்கத்தைத் தருகின்றன. மேலே மார்க்கங்களைக் குறித்து நாத்திக மக்கள் முன்வைக்கும் ஆறு குற்றச்சாட்டுகளைக் கண்டோம். அவை ஒரு பொருட்டே அல்ல, ஏனெனில் மார்க்க நம்பிக்கைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. நிம்மதி, சந்தோஷம், அன்பு, பாசம், ஒற்றுமை, விசுவாசம், இச்சையடக்கம், சமாதானம் போன்ற பல நல்ல விஷயங்களை மார்க்கம் நமக்குக் கற்றுத் தராமல் இல்லை, மக்கள் மத்தியில் நிலவி வருகின்ற இச்சைகளை களையெடுக்க ஆன்மீகம் உதவாமல் இல்லை. காலையில் எழுந்து கடவுளைத் தொழுது இன்னிசைப் பாடல்கள் பாடி இனிமையாகத் தங்கள் வாழ்வை தொடங்குபவர்கள் உள்ளார்கள், நிம்மதியாக அந்த நாளை முடித்து, இரவில் ஜெபம் செய்துவிட்டு உறங்கச் செல்வோர் உள்ளார்கள். எனவே, உண்மையைத் தெளிவாக அறிந்துக் கொண்டு, நமக்கு வழிக்காட்டியவரை நேர்மையாகப் பின்பற்றினாலே தீண்டாமை, சாதிக் கொடுமை, அழுப்பு, சோர்வு, மூட நம்பிக்கைகள் போன்ற மேற்கண்ட பிரட்சனைகள் எல்லாம் விலகிப் போகும். நன்மையோ தீமையோ நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் உள்ளது. நம்மீது உள்ள பிழையை பிறர் மேல் சுமத்துவது தவறு.
மார்க்கங்களுள் நமக்குப் பிடித்ததை நாம் தேர்ந்தெடுப்பது நம் உரிமை, அந்த வகையில் இங்கு இயேசு கிறிஸ்து இறைவனுக்கும் வாழ்க்கைக்கும் கூறிய விளக்கத்தை இந்த வலைப்பூவில் அறிந்து கொள்ளலாம்.
ஒரு வேண்டுகோள், இது இயற்கைக்கு மிஞ்சிய ஒரு படைப்பாற்றல் உண்டு என நம்புபவர்களுக்கும், அந்த சக்தியை அறிந்த கொள்ள விரும்புபவர்களுக்கும் எழுதப்பட்ட வலைப்பூ, எனவே நாத்திகர் என கூறிக் கொண்டு வாதிட வருபவர்கள் முதலில் உலகத் தோற்றத்திற்கு விடையளிக்கவும், அதற்கு விளக்கம் அளிக்காமல் "நாத்திகர் என்ற பெயரில்" வாதம் செய்ய முனைவது அர்த்தமற்றது. அடுத்ததாக, இறைநம்பிக்கை உள்ளவர்கள் இறைவனைக் கிட்டிச் சேர்வதைக் குறித்த உங்கள் மார்க்க நம்பிக்கை என்ன என்று உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொண்டு கேள்விகள் எழுப்பவும், அப்போது தான் சத்தியத்தை அறிந்து கொள்ள நம்மால் முடியும், அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தின் மேல் நீங்கள் கொண்ட கசப்பை இங்கு கொட்டித் தள்ளாதீர்கள். சத்தியத்தை அறியும் நோக்கில் பண்புடன் நடந்து கொள்வோம்.
"இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானது, அது மூடநம்பிக்கையல்ல...!"
No comments:
Post a Comment