Pages

Sunday, May 4, 2014

மரபியல் பார்வையில் ஆதாம், ஏவாள், நோவா...!

உலக மக்கள் அனைவரும் வெறும் இரண்டே பேரில் இருந்து தான் வந்தனர் என சொன்னால் அதைக் கேட்க நம்மில் பலருக்கு வியப்பாகத் தான் இருக்கும்! ஆனால் பைபிள் அவ்வாறு தான் சொல்கிறது, உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தம்பதியரில் இருந்தே தோன்றினர், அவர்கள் தான் ஆதாமும், ஏவாளும். பின்பு ஜலப்பிரளயத்தினால் மக்கள் மரித்துவிட, நோவாவின் சந்ததி வழியாக பூமியில் ஜனங்கள் பலுகி பெருகினார்கள் என்கிறது பைபிள்.

இன்று உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் தந்தை இருந்தனர் என சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? நம் நிறத்திற்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லாத வெள்ளையர்களையும், ஆப்ரிக்கர்களையும், சீனர்களையும் நம் சகோதரர்கள், தூரத்து உறவினர்கள் என கூறினால் நம்மால் எப்படி நம்ப முடியும்? ஏனெனில் இன்று நம் கண்களுக்குத் தேவை ஆதாரங்கள், நம் நம்பிக்கையைப் பெற அறிவியலில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் சான்றுகள் கிடைத்தே தீர வேண்டும்.

இனி தான் உண்மையான வியப்பு உங்களுக்கு காத்திருக்கிறது... நம் அனைவருக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் தான் இருந்தாள் என்கிறது அறிவியல். வெள்ளையரோ, ஆப்ரிக்கரோ, இந்தியரோ, சீனரோ யாராய் இருந்தாலும் சரி, இன்றுள்ள அத்தனை பேருக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் இருந்தாள் என நம் மரபணுக்கள் கூறுகின்றன. அது மட்டுமல்ல, ஆண் மக்கள் அனைவருக்கும் ஒரு காலத்தில் ஒரே தந்தை தான் இருந்தார் என அதே மரபணுக்கள் கூறி வருகின்றன. மரபியல் கூறும் அந்த தாய் தந்தயரைக் குறித்து இனி காணலாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு மரபணு பகுதிகள் "மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ" மற்றும் "Y குரோமோசோம்" என்பனவாகும். இது நுணுக்கமான அறிவியல் செய்திகளைக் கொண்ட கட்டுரை, எனவே கவனமாகப் படிக்கவும்.

Y குரோமோசோம்:
குரோமோசோம் என்பது மரபணுக்களை உள்ளடக்கிய ஒரு சிறுபகுதி. பெற்றோரில் இருந்து பிள்ளைகளுக்கு மரபுத்தகவல்களைக் கடத்த இந்த குரோமோசோம்கள் உதவுகின்றன. மனிதர்களாகிய நமக்கு மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. அதில் 23 தாயில் இருந்து பெற்றவை ஆகும், 23 தந்தையில் இருந்து பெற்றவை ஆகும். தந்தையின் 23 குரோமோசோம்களை தாயின் இனப்பெருக்க பகுதிக்கு எடுத்துச் செல்வது விந்தணுக்கள். அது போல தாயின் 23 குரோமோசோம்கள் சூழ்முட்டையில் அடங்கியிருக்கும்.

X குரோமோசோம் மற்றும் Y குரோமோசோம்

ஒரு குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது தாயல்ல, தந்தையின் வித்தே குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. தாயின் சூழ்முட்டையில் இருக்கும் முதல் 22 குரோமோசோம்களும் தந்தையின் விந்தணுவில் இருக்கின்ற முதல் 22 குரோமோசோம்களும் அமைப்பில் ஒத்தவை. ஆனால் சூழ்முட்டையில் உள்ள 23ஆவது குரோமோசோம் X வடிவில் இருக்கும். தந்தையின் விந்தணுவில் உள்ள 23ஆவது குரோமோசோம் X வடிவில் இருக்கலாம் அல்லது Y வடிவில் இருக்கலாம்.

பெண்ணின் சூழ்முட்டையை நோக்கிச்
செல்லும் ஆணின் விந்தணுக்கள்

தந்தை குழந்தைக்காக அளிக்கும் 23 குரோமோசோம்களில் 23ஆவது "X குரோமோசோம்" ஆக இருப்பின் குழந்தை பெண்ணாக பிறக்கும், அல்லது 23ஆவது குரோமோசோம் "Y குரோமோசோம்" ஆக இருப்பின் குழந்தை ஆணாக பிறக்கும். கணவன் மனைவியை அறியும் போது ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் சூழ்முட்டையை நோக்கி நீந்திச் செல்கின்றன. அதில் சில விந்தணுக்கள் X குரோமோசோமைக் கொண்டிருக்கும், சில விந்தணுக்கள் Y குரோமோசோமைக் கொண்டிருக்கும். முதலாவ‌தாக சூழ்முட்டையோடு எந்த விந்தணு இணைகிறதோ அதுவே குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கிறது. சூழ்முட்டையோடு முதல் விந்தணு இணைந்த பிறகு பிற விந்தணுக்கள் சூழ்முட்டையை அணுக முடியாது. சூழ்முட்டையும் விந்தணுவும் சேர்ந்து மனிதர்க்கு தேவையான 46 குரோமோசோம்களையும் பெற்றுவிட்டதால் கரு உருவாகி குழந்தை கருப்பையில் வளரத் தொடங்குகிறது. இதுவே ஒவ்வொருவர் பிறப்பிற்கும் முன்பு நிகழ்கின்ற சம்பவங்கள்.

இப்போது "Y குரோமோசோம்" என்றால் என்ன உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த "Y குரோமோசோம்" தான் இன்று உலகில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தந்தை இருந்திருக்கிறார் என கண்டுபிடிக்க உதவியிருக்கிறது. "Y குரோமோசோம்" தந்தையில் இருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படுவதால் இன்றுள்ள பெண்களுக்கும் ஒரே தந்தை தான் ஒரு காலத்தில் இருந்தாரா என்று கண்டுபிடிக்க இந்த குரோமோசோம் உதவவில்லை. இருந்தாலும் இன்று உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு ஆணின் வாரிசுகள் என்று தெரிந்திருப்பது ஆச்சரியமே.

இந்த கண்டுபிடிப்பிற்கு Y குரோமோசோம் எப்படி உதவியது என காண்போம். மரபணுக்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நபரின் நெருங்கிய உறவினர் யார் என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒரு நபரின் மரபணுக்கள் அந்நிய மனிதனோடு ஒத்துப் போவதை விட அவரின் உறவினரோடு நன்றாக ஒத்துப் போகும். அதனால் மூவரின் மரபணுக்களின் ஒற்றுமையை வைத்து அவர்களில் எந்த இரண்டு பேர் மிக நெருங்கிய உறவுக்கார் என்பதை எளிதாக அறிந்து விட முடியும்.

Y குரோமோசோம் மட்டுமே தந்தை தன் (ஆண்) குழந்தைக்கு அளிக்கும் 23 குரோமோசோம்களில் அடிக்கடி மரபணுமாற்றம் அடையாமல் ஒவ்வொரு சந்ததியிலும் காக்கப்படுகிறது, ஏனெனில் தந்தையின் மற்ற 22 குரோமோசோம்களின் அமைப்பை ஒத்த‌ குரோமோசோம்களை தாயும் கொண்டிருக்கிறாள். அதனால் தந்தை அளிக்கின்ற முதல் 22 குரோமோசோம்களின் அமைப்பு ஒவ்வொரு சந்ததியிலும் தாயின் குரோமோசோம்களால் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு Y குரோமோசோம் இல்லாதலால், ஆண் குழந்தையை அவள் சுமக்கும் போது தந்தையிடம் இருந்து பெறப்பட்ட Y குரோமோசோமின் அமைப்பு தாயின் 23ஆவது குரோமோசோமால் பெரிதாக பாதிக்கப்படாமல் காக்கப்படுகிறது. இவ்வாறு Y குரோமோசோம் பல சந்ததிகளுக்கு பாதிப்படையாமல் காக்கப்படுவதால் பெரிய அளவிலான (ஆண்களுக்கான) மரபணு சோதனைகளுக்கு இதனை பயன்படுத்துகின்றனர்.

எனவே பல தேசத்து ஆண்களை அழைத்து அவர்களிடம் உள்ள Y குரோமோசோமின் ஒற்றுமைக்கான‌ மரபணு சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரிலும் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் எந்த இரண்டு பேர் என முதலில் தீர்மானிக்கப்பட்டது, பின்பு அவர்களோடு நெருங்கிய அடுத்த உறவுக்காரர் யார் என கண்டுபிடிக்கப்பட்டது, இப்படியே அடுத்த உறவினர் யார் அதற்கடுத்த உறவினர் யார் என பின் செல்ல செல்ல அவர்கள் அனைவரும் இறுதியாக ஒருவரோடு ஒருவராக‌ முடிவு பெற்றுவிட்டனர். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே தந்தையில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும், ஒரே ஆணின் வாரிசுகளே இன்று உலகில் உள்ள அத்தனை ஆண்களும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எளிதாக புரிந்து கொள்ள கீழுள்ள படத்தைக் காணவும். அதில் இறுதியாக "Adamo Y-DNA" என முடிவு பெறும் நபரே இன்றுள்ள அத்தனை ஆண்களின் தந்தையாம்! அவருக்கு பெயர் "Y குரோமோசோமல் ஆதாம்" என சூட்டப்பட்டுள்ளது. இது பைபிளிற்கு கிடைத்த ஒரு புகழாரம்.


அடுத்து மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ குறித்து காணலாம்.

மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ
இங்கு குரோமோசோம்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனெனில் குழந்தை தன் தாயிடமிருந்து பெறுகின்ற குரோமோசோம்கள் எல்லாம் தந்தையின் குரோமோசோம்களோடு இணைந்து ஒவ்வொரு சந்ததியிலும் தன் அமைப்பில் சிதைந்து விடுகின்றன‌ என கண்டோம். குழந்தை ஆணாக இருந்தால் மட்டும் தாயின் 23ஆவது X குரோமோசோம் பெரிய அளவில் சிதையாமல் இருக்கிறது, ஏனெனில் தந்தை அளித்த Y குரோமோசோம் அதன் அமைப்பை அவ்வளவாக மாற்ற இயலவில்லை.

ஆனால் குழந்தை பெண்ணாக இருந்தால் தந்தை அளிக்கும் 23ஆவது குரோமோசோம் X ஆகும், எனவே தாயின் 23ஆம் X குரோமோசோம் அமைப்பில் பாதிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆணிடம் இருந்து பெறப்படும் Y குரோமோசோம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் பல சந்ததிகளுக்கு காக்கப்படுவது போல பெண்ணிடம் இருந்து பெறப்படும் எந்த குரோமோசோமும் காக்கப்படுவதில்லை. இன்றுள்ள உலக மக்கள் அனைவரையும் பெற்ற அன்றைய தாய் தன் குழந்தைகளுக்கு அளித்த அத்தனை குரோமோசோம்களும்  அமைப்பில் சிதைந்துவிட்டன. அதனால் நம் எல்லாரையும் பெற்ற தாயை மரபணு சோதனை வாயிலாக காண குரோமோசோம்களால் எந்த பயனும் இல்லை.

அதற்கு பதிலாக கைக்கொடுத்த இன்னொரு மரபணு தான் "மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ" ஆகும். மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ என்பது குரோமோசோம்களில் அடங்காத புற மரபணு ஆகும். மனித உடல் பல செல்களால் (உயிரணுக்களால்) ஆனது. நம் உடலில் உள்ள உயிரணுக்களில் இருந்து இப்போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரண்டு பகுதிகள் "நியூக்கிலியஸ் (உயிரணுக்கரு)" மற்றும் "மைட்டோகாண்டிரியா (இழைமணி)" என்பன. நியூக்கிலியஸில் (Nucleus) தான் நாம் நம் தாய் தந்தையரில் இருந்து பெற்ற 46 குரோமோசோம்களும் அடங்கியுள்ளன. மைட்டோகாண்டிரியா (Mitochondria) என்பது நியூக்கிலியஸில் இருந்து சற்று விலகி அமைந்துள்ள ஒரு உயிரணுப்பகுதி. இந்த மைட்டோகாண்டிரியாவிற்குள்ளும் சில மரபணுக்கள் உள்ளன, அதை தான் "மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ" என்கிறோம்.


மைட்டோகாண்டிரியா டி.என்.ஏ தாயில் இருந்து மட்டுமே ஒவ்வொரு குழந்தைக்கும் கடத்தப்படுகிறது. அது ஆண் குழந்தையானாலும் சரி, பெண் குழந்தையானாலும் சரி. உதாரணாத்திற்கு ஒரு தாய் தன் மகனுக்கு தன் மைட்டோகாண்டிரியா டி.என்.ஏவை அளிக்கிறார் என வைத்துக் கொள்வோம், அவன் வளர்ந்து பெரியவனாகி ஒரு குழந்தை பெறுகிறான். அந்த குழந்தை கொண்டுள்ள மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ அந்த ஆணில் இருந்து வந்ததல்ல, மாறாக அவன் மனைவியில் இருந்து அக்குழந்தைக்கு கடத்தப்பட்டது. எனவே, நம் அனைவருக்கும் உள்ள மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ காலங்காலமாக பெண்களிடம் இருந்து மட்டுமே வந்தவை ஆகும். அண்மையில் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தந்தை வழியாகவும் வரலாம் என கருத்துகள் வெளியாகி, மீண்டும் அது பெரும்பாலான அறிவியல் அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதற்கான சாத்தியங்கள் இருந்தாலும் அது மிக மிக அரிதான சாத்தியம். தந்தையின் விந்தணு தாயின் சூழ்முட்டையோடு சேரும் போது தந்தையில் இருந்து வருகின்ற மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ வேதிவினைகளால் அழிந்து விடுகிறது. எதாவது கோடியில் ஒருவருக்கு தந்தையின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தப்பி பிழைத்து கருவிற்குள் கடந்துவிடும். எனவே, மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தாய்வழியாகவே 99.999% பெறப்படுகிறது என உயிரியல் ஆய்வாளர்கள் ஏற்றுள்ளனர்.

மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ பெண்களிடம் இருந்து மட்டுமே காலங்காலமாக பெறப்படுவதால் அதனை வைத்து உலக மக்களின் தாயைக் காண்பது எளிது. உலகில் உள்ள ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும் வெவ்வேறு தாய் இருந்தால் மக்களின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ அமைப்பில் ஒத்துப்போகாது. ஆனால் உலகின் பல்வேறு தேசங்களில் வாழும் அத்தனை மக்களுக்கும் ஒரே மாதிரியான மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ அமைந்திருப்பதைக் கண்டு மரபியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனால் உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் தான் இருந்தாள் என்பது உறுதியாகியுள்ளது. அப்பெண்ணிற்கு "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" என பெயரிட்டுள்ளனர்.

இதனை இணையத்தின் பல்வேறு என்சைக்லோபீடியாக்களில் குறித்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் இச்செய்தி தவறாக இடம்பெற்றுள்ளது, ஆங்கில கட்டுரையின் பொருள் அறியாமல் தமிழ் விக்கி கட்டுரையை மொழிப்பெயர்த்துள்ளனர். உதாரணத்திற்கு, மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ உலகில் தற்போதுள்ள பெண்களுக்கு மட்டுமே ஒரே தாய் இருந்தாள் என்று நிரூபித்து இருப்பதாகவும், ஆனால் ஆண்களுக்கு இன்னும் அவ்வாறு நிரூபிக்கப்படவில்லை என குறித்துள்ளனர் (4.5.14). இது தவறு. ஆண், பெண் என உலக மக்கள் எல்லாருக்கும் ஒரே தாய் இருந்திருக்கிறாள் என்றே மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ நிரூபித்து இருக்கிறது. ஒருவேளை தமிழ் விக்கி சொல்வது போல பெண்களுக்கு மட்டுமே ஒரே தாய் இருந்தாள் என்று எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் என காணலாம். பெண்கள் திருமணமாகி பெறும் ஆண் பெண் குழந்தைகளுக்கு எல்லாம் அவர்களது மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ மட்டுமே கடத்தப்படும். எனவே, தந்தையர் எல்லாம் இறந்து அடுத்த சந்ததி வரும் போது, புது ஆண்கள் எல்லாம் பெண்களிடம் உள்ள அதே மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏவைத் தான் கொண்டிருப்பார்கள். எனவே, மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ உலகில் உள்ள ஆண், பெண் என அத்தனை மக்களுக்கும் இருந்த பொதுவான தாயையே உறுதி செய்திருக்கிறது என்பதில் சந்தேகம் தேவையில்லை, தமிழ் விக்கியைத் தவிர பிற அனைத்து என்சைக்லோப்பீடியாக்களிலும் இச்செய்தி சரியாக இடம்பெற்றுள்ளது.

"Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" வாழ்ந்த காலம் பற்றி: Y குரோமோசோமல் ஆதாம் மற்றும் மைட்டோகாண்டிரியல் ஏவாள் வாழ்ந்த காலம் குறித்து அறிவியல் ஆய்வாளர்களுக்கு உள்ளாகவே பெரும் கருத்து மோதல்கள் உள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தை அருகில் கொண்டு வர வர அது பரிணாம கொள்கைகளுக்கு பெரும் இடையூறலாக அமைகிறது, எனவே மைட்டோகாண்டிரியல் ஏவாள் 8000 தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்தவள் என தீர்மானித்துள்ளனர். அதன் படி, அப்பெண் கிட்டத்தட்ட 99000 முதல் 200000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள் என ஏற்கப்படுகிறது. இதனை நிச்சயாமாக கூற முடியாது, தற்போது ஏற்றுள்ள நிலவரப்படி இக்காலம் முன்வைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். இக்கணிப்பிற்குப் பின் பரிணாமக் கொள்கைக்கு சாதகமான அறிவியல் சாத்தியங்களும் உள்ளன, இடையூறான யூகங்களும் உள்ளன. எனவே சரியான காலத்தைக் கணிப்பது தற்சமயம் ஆய்வின் நிலையிலேயே உள்ளது.

Y குரோமோசோமல் ஆதாமை பொறுத்த வரை அவரை மைட்டோகாண்டிரியல் ஏவாள் வாழ்ந்த காலத்தோடு பொறுத்த எந்த ஆய்வாளர்களும் 2012 வரை முன்வரவில்லை. முதலில் அவர் மைட்டோகாண்டிரியல் ஏவாளை விட பல்லாயிர ஆண்டுகள் மூத்தவர் என்றனர், பின்பு அப்பெண்ணை விட பல்லாயிர ஆண்டுகள் இளையவர் என்றனர். தற்போது இவரும் மைட்டோகாண்டிரியல் ஏவாள் வாழ்ந்த அதே கால கட்டத்தில் தான் வாழ்ந்திருக்கிறார் என அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை குறித்து கருத்து வேறுபாடுகளும் உள்ளன. (Source)

இருவரது காலத்தையும் கணிக்க அறிவியல் அறிஞர்கள் திண்டாடுவதற்கு முதல் காரணம் பரிணாமக் கொள்கைகளோடு அவர்களின் காலத்தைப் பொறுத்தவே. ஏனெனில் இதனைச் சுட்டிக் காட்டி மேற்கத்திய நாடுகளில் உள்ள இறைநம்பிக்கையாளர்களும், பரிணாமக் கொள்கையில் நம்பிக்கையில்லாத அறிவியல் ஆய்வாளர்களும் பரிணாமவியலைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, மேற்கத்திய பரிணாம வட்டத்திற்குள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன, கருத்து வேறுபாடு கொண்ட தலைப்புகளாக‌ "Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" உள்ளனர்.

இனி, முக்கியமான தகவல்களைக் காணலாம்.

இங்கு சொல்லப்பட்ட செய்திகளுக்கு மறுப்பு சொல்ல விரும்பும் நபர் இப்படி எழுத முனைவார்,

"இந்த பதிவை எழுதிய நபருக்கு கொஞ்சம் கூட அறிவியல் ஞானமே இல்லை. தன் நம்பிக்கைகளுக்கு ஆதாரங்காட்ட இவ்வாறு அறிவியல் கண்டுபிடிப்புகளைத் திரித்து எழுதுகிறார். "மைட்டோகாண்டிரியல் ஏவாள் தான் இன்றுள்ள அத்தனை மக்களின் தாய், Y குரோமோசோமல் ஆதாம் இன்றுள்ள அத்தனை ஆண்களின் தந்தை" என்றாலும் அவர்கள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை, அவர்கள் வாழ்ந்த சமயத்திலும் அதற்கு முன்பும் பல மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால் அவர்களது சந்ததி இன்றுவரை நீடித்து வரவில்லை, அதிர்ஷ்டவசமாக மைட்டோகாண்டிரியல் ஏவாள் மற்றும் Y குரோமோசோமல் ஆதாமின் சந்ததி மட்டும் இன்றுவரை நீடித்து அவர்களது வாரிசுகளாக மக்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள். அதோடு Y குரோமோசோமல் ஆதாமும் மைட்டோகாண்டிரியா ஏவாளும் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, இதையெல்லாம் மறைத்து விட்டு பைபிளிற்கு ஆதாரங்காட்ட இந்த நபர் பொய் சொல்லுகிறார்"

இந்த மறுப்புச் செய்திகள் எல்லாம் பைபிளிற்கு இன்னும் ஆதரவானவை...! எப்படி?

பைபிள்படி, உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள். அவர்கள் சந்ததி வழியாக‌ பல தலைமுறைகள் கழித்து பிறந்தவர் நோவா. அக்காலத்தில் பூமி பாவத்தால் நிறைந்திருந்ததால் தேவன் மனிதர்களை ஜலப்பிரளயத்தினால் அழித்தார். அதில் தப்பிப் பிழைத்தது நோவாவின் குடும்பம் மட்டுமே, அதாவது நோவா, அவரது மனைவி, அவரது மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள் என்ற எட்டு பேர் தான். இந்த எட்டு பேர்களால் மீண்டும் மனிதர்கள் பழுகிப் பெருகினர் என்கிறது பைபிள். அப்படியெனில், இன்றுள்ள நம் அனைவரும் நோவாவின் குடும்பத்தினர். அதில் உள்ள ஆண்கள் நோவாவும் அவரது மூன்று மகன்களும். ஆக, நோவாவின் "Y குரோமோசோம்" தான் அவரது மகன்களுக்கும் உள்ளது. எனவே, "Y குரோமோசோமல் ஆதாம்" நோவாவாக இருக்கலாம்.

இனி மைட்டோகாண்டிரியல் ஏவாளைக் குறித்துக் காணலாம். ஏவாளுக்குப் பல பெண் வாரிசுகள் உண்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏவாளுக்கு உண்டான அந்த பெண் வாரிசுகளுள் ஏதோ ஒரு பெண் வழி வந்தவர்கள் தான் தப்பி பிழைத்த நோவா குடும்பத்தினர் என வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்.


மேற்கண்ட படத்தின் படி, மெத்துசலாவின் மனைவியின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தான் தப்பி பிழைத்த நோவா குடும்பத்தினர் எட்டு பேருக்கும் உள்ளது. இப்படத்தின் மூலம் கூற வருவது இதுதான், நோவாவின் பெண் குடும்பத்தினர் ஏவாளின் ஒரு பெண் வாரிசு வழியாக வந்தவர்களாக இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன‌, ஏனெனில் அக்காலத்தில் மக்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களையே மணமுடித்துக் கொண்டார்கள். எனவே, "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" நோவா குடும்பத்தினரைப் பெற்றெடுத்த ஏவாளின் ஒரு பெண் வாரிசாக இருக்கலாம்! (அந்த பெண் வாரிசு மெத்துசலாவின் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, மெத்துசலாவின் மனைவி விளக்கத்திற்காக மட்டுமே எடுத்துக்காட்டப்பட்டாள்).

இப்போது மேற்கண்ட மறுப்பைப் படிக்கவும்,

"மைட்டோகாண்டிரியல் ஏவாளும், Y குரோமோசோமல் ஆதாமும் உலகின் முதல் மனிதர்கள் அல்ல, அவர்களுக்கு முன்பும் மனிதர்கள் வாழ்ந்தனர், ஆனால் மற்ற மனிதர்களின் வாரிசுகள் நிலைக்கவில்லை, அதிர்ஷடவசமாக மைட்டோகாண்டிரியல் ஏவாளின், Y குரோமோசோமல் ஆதாமின் வாரிசுகள் மட்டும் நீடித்து வருகின்றனர், அதோடு அவ்விருவரும் கணவன் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை"

இப்பதிவின் மூலம் நாம் அறிய வருவது,

1) "Y குரோமோசோமல் ஆதாம்" நோவாவாகவும், "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" நோவா குடும்பத்தினரைப் பெற்றெடுத்த ஏவாளின் ஒரு பெண் வாரிசாகவும் இருக்கலாம். மரபியல் தருகின்ற செய்திகள் பைபிளோடு கச்சிதமாகப் பொருந்துகிறது.

2) அறிவியல் படி, இன்றுள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் இருந்திருக்கிறாள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3) அத்தனை ஆண் மக்களும் ஒரே ஆணின் வாரிசுகள் என்பது நிருபனம் ஆகி உள்ளது. (பெண்களுக்கு Y குரோமோசோம் இல்லாததால் பெண்களிடம் இந்த ஆய்வை நடத்த இயலவில்லை)

4) இன்று உலகில் 7 பில்லியன், அதாவது ஏழநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் இருந்திருக்கிறாள் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு சாதரணமானது அல்ல, அது வியப்பிற்குரியது.

5) அந்த 7 பில்லியன் மக்களில் பாதிக்கு மேல் ஆண் மக்கள், அவர்கள் அத்தனை பேரும் ஒரே ஆணின் வாரிசுகள் என்பதும் வியப்பிற்குரியது தான்.

உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு தாய் தந்தை இருந்தனர் என பைபிள் கூறுவதற்கு அறிவியல் சாத்தியங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல், பைபிளில் ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா, இஸ்ரவேலருக்கு தகப்பன் யாக்கோபு என ஒவ்வொரு பகுதியில் குடியிருந்த ஜனங்களுக்கும் ஒவ்வொரு நபரை பைபிள் தகப்பன் என்கிறது, எவ்வாறு ஒரு மனிதனின் வாரிசுகள் ஒரு பகுதியின் மக்களாக பெருக முடியும் என பல காலமாக பைபிளைக் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. அது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த கண்டுபிடிப்புகள் சாதமாக நிற்கின்றன. அறிவியல் பார்வையில் இதெல்லாம் அறிவுப்பூர்வமான செய்திகள் என்பதில் சந்தேகமில்லை. அந்த காலத்தில் உலக சிருஷ்டிப்பைக் குறித்து பல்வேறு சமயங்களில் செய்திகள் சொல்லப்பட்டன, அது போல பைபிளிலும் சொல்லப்பட்டுள்ளது. 

பைபிள் அல்லாத பிற பண்டைய வேத நூல் எதாவது ஒன்றை எடுத்து அதிலுள்ள உலக சிருஷ்டிப்பு குறித்த செய்தியை வாசித்தால் பைபிள் எவ்வளவு தூரம் தன் தரத்தில் உயர்ந்து நிற்கிறது என காணலாம். நிச்சயமாக அதில் உள்ள படைப்பின் செய்திகளுக்கு அறிவியல் வளர வளர சிறிது சிறிதாக ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன, முதலில் "Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" குறித்த கண்டுபிடிப்பு வெளியானதும் அது பல அறிவியல் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டது, இப்போது ஏற்கப்பட்டுள்ளது, தற்போது இருவரும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர், கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்த காலத்தை அருகில் கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர். நிச்சயமாக, பைபிள் அறிவியல் சாத்தியங்கள் மிக்க படைப்பின் செய்திகளைக் கூறுகிறது என்பதில் ஐயமில்லை. மரபியல் விரைவில் "Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" யார் என அடையாளம் காணும். விழித்திருப்போம்.
"மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம், நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?" - இயேசு (யோவான் 3:11,12)

Read here - Genetic Adam and Eve uncovered (FOX News)

No comments:

Post a Comment