Pages

Saturday, May 31, 2014

இஸ்ரவேலின் விடுதலை பயணம் குறித்த‌ உண்மைகள் - பகுதி 1

 
இன்று பெரும்பாலான நாத்திக வரலாற்று ஆய்வாளர்கள் பைபிளின் முதல் ஆறு புத்தகங்களை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இஸ்ரவேலில் ராஜ்யம் தோன்றிய பிறகே வலுவான சான்றுகள் கிடைப்பதாகவும், அதனால் இஸ்ரவேலின் மேல் ராஜ்யம் தோன்றுவதற்கு முன்பு நடந்ததாக பைபிள் கூறும் எந்த செய்திகளையும் உறுதியாக‌ ஏற்றுக் கொள்ள முடியாது என பிடியாக உள்ளனர். அதாவது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், யோசுவா என்ற இந்த ஆறு புத்தகங்களும் உண்மையல்ல என்பது இவர்களின் கருத்து. எனவே, இஸ்ரவேலின் மேல் ராஜ்யம் உண்டான போது தங்களுக்கு ஒரு அடையாளத்தை ஒற்றுமையைத் தேடிக் கொள்ள விரும்பிய இஸ்ரவேலர்கள் பைபிளின் முதல் ஆறு புத்தகங்களையும் உண்டாக்கினார்கள் என்கிறார்கள். சரி, அதற்கடுத்த 61 நூல்களையாவது முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது, அதிலும் சில செய்திகளை ஏற்கின்றனர், சில செய்திகளை மறுக்கின்றனர். அப்படியென்றால் நாம் பைபிளை நம்பலாமா? தொடர்ந்து படிக்கவும்...

நிச்சயமாக வரலாற்று ஆய்வாளர்களின் மேல் நாம் வருத்தம் கொள்ள‌க் கூடாது. ஏன் என்றால் அறிவியல், வரலாறு போன்ற செய்திகளை ஆராயும் போது வேதங்களுக்கும், மார்க்க ரீதியான புனித நூல்களுக்கும் முதல் இடம் கிடையாது, அதற்கு பதிலாக அக்காலத்தில் எழுதப்பட்ட சரித்திர ரீதியான தடயங்களைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த திருமுழுக்கு யோவானின் இறப்பைக் குறித்து சில செய்திகளை மாற்கு சுவிசேசம் கூறுகிறது, ஜோசபஸ் என்ற முதல் நூற்றாண்டு யூதர் எழுதிய நூல் ஒன்று கூறுகிறது. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், மாற்கு சுவிசேசம் யோவான் இறந்து 30 ஆண்டுகளுக்குள் எழுதி முடிக்கப்பட்டது, மாற்கின் ஆசிரியர் யோவான் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் ஜோசபஸின் நூல் யோவான் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது, ஜோசபஸ் யோவான் இறந்த பின்பு பிறந்தவர். ஆனால் யோவானிற்கு உரிய சரித்திர ஆதாரமாகவும், அவர் வாழ்க்கைக் குறித்த செய்திகளை அறியவும் பைபிளின் மாற்கின் சுவிசேசத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதற்கு பதிலாக ஜோசபஸின் நூலையே கணக்கில் ஏற்கின்றனர். பைபிள் ஜோசபஸின் நூலைவிட நம்பத்தகுந்ததாக இருந்தாலும் அது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுவதற்கு முதல் காரணம், அது சமயஞ்சார்ந்த புனித நூல்... கிறிஸ்தவர்கள் நம்புவது போல பிற மக்கள் அதனை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதன் காரணமாகவே அது முதலாவது புறந்தள்ளப்படுகிறது.

இதனால் கிறிஸ்தவர்கள் வருந்த தேவையில்லை. மாறாக சந்தோசப்பட வேண்டிய செய்தி இது. கிறிஸ்தவர்கள் வேறொரு சமயத்தின் நம்பிக்கைகளையும், அந்த சமயத்து தெய்வங்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அதிசயங்களையும் (ஏன் இந்தியாவில் கூட நிறைய புராணக் கதைகள் உண்டே!) ஏற்றுக் கொள்வார்களா? இல்லை...! அது போலவே மற்ற மக்களும் பைபிளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது. வரலாறை ஆராய விட வேண்டும், அப்போது எது பொய், எது உண்மை என்பது மக்களுக்குத் தெளிவாக தெரிந்துவிடும். இன்று பைபிளை விட வேறெந்த புனித நூல் சரித்திரத்தில் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது? நிச்சயமாக புனித நூல்களில் சரித்திரச் செரிவிற்காக முதல் இடம்பிடித்த நூல் பைபிளே, அதன் காரணமாகவே இறை நம்பிக்கையுள்ளோர் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவை ஏற்கின்றனர். அதோடு இயேசு கிறிஸ்து சொல்வது போல, "நமக்கு நாமே சாட்சிக் கொடுத்தால் அது தகாது". வரலாற்றை ஆராயந்து கிட்டிய சான்றுகள் பலவற்றைச் சுட்டிக் காட்டி பைபிளில் காணப்படும் பல‌ செய்திகளை வரலாறு 100% ஏற்றுக் கொண்டுவிட்டது, ஆனால் பிற புனித நூல்கள் பலவற்றுக்கு ஒரு செய்திக் கூட இன்னும் நிருபிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. எனவே, நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்...! உங்களை அழைப்பவர் உண்மையுள்ளவர்...

மேலே பைபிளின் முதல் ஆறு நூல்களை வரலாற்று ஆய்வாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என ஒரு செய்தி கண்டோம். அது வியப்பல்ல, ஏன் எனில் இதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்கள் பாபிலோனுக்கு இஸ்ரவேலர்கள் சிறைப்பட்டு போனதற்கு முன்பு நிகழ்ந்ததாக பைபிள் கூறுகின்ற செய்திகளை கூட ஏற்க முன்வரவில்லை. தாவீது, சாலமோன் போன்ற பைபிளின் அரசர்கள் எல்லாம் புராணக் கதாநாயகர்கள் என சொல்லப்பட்டனர், ஆனால் தடம்புரண்டது, இப்போது தாவீது, சாலமோன் வாழ்ந்தனர் என ஏற்றுக் கொண்டு இன்னும் 500 ஆண்டுகள் பின் தள்ளி சென்று விட்டார்கள், இன்று இஸ்ரவேலின் மேல் ராஜ்யம் உண்டான பிறகு பைபிள் கூறுகின்ற செய்திகள் வேண்டுமானால் ஒர் அளவு உண்மை என ஏற்றுக் கொள்கின்றனர். அப்படி இப்படி என சுருக்கி தற்போது பைபிளின் முதல் ஆறு புத்தகங்கள் வரை ஆய்வுகள் வந்துவிட்டன. இந்த வலைப்பூவில் பைபிளை உண்மைப்படுத்தும் அத்தனைக் கண்டுபிடிப்புகளையும், ஆய்வாளர்களால் 100% ஒத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு உண்மைகளையும் காணலாம். தற்போது, பைபிளின் பிற நூல்களைப் போல முதல் ஆறு நூல்கள் கூட சரித்திரத்தில் நிகழ்ந்த உண்மைதான் என்பதற்கு ஆதாரங்களைக் காணலாம். அதிலும் குறிப்பாக யாத்திராகமம் பற்றி...

இதுவரை நீங்கள் கண்டது அறிமுகம் மட்டும் தான், இன்னும் கட்டுரைக்குள்ளே நாம் நுழையவில்லை, அடுத்த பகுதியில் இதன் தொடர்ச்சியைக் காணலாம்...

Sunday, May 11, 2014

தொள்ளாயிரத்து அறுபத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்த மெத்தூசலா...!

  1. அறிமுகம்
  2. தவறான போதனைகள்
  3. ஆதியாகமம் கூறும் வரலாற்றுப் பிண்ணனி
  4. சுமேரிய நாகரீகம் & எகிப்திய நாகரீகம்
  5. மெசப்பொத்தோமியர்களின் வழக்கங்கள்
  6. பைபிளின் தலைமுறை பட்டியல்
  7. முடிவுரை

அ) அறிமுகம்:
ஆதாம் வாழ்ந்த காலமெல்லாம் 930 ஆண்டுகள்... நோவா வாழ்ந்த காலமெல்லாம் 950 ஆண்டுகள்... கேனான் வாழ்ந்த காலமெல்லாம் 910 ஆண்டுகள்... மெத்தூசலா வாழ்ந்த காலமெல்லாம் 969 ஆண்டுகள்... இது தான் பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமம் கூறும் முற்பிதாக்களின் வயது விவரங்கள், ஆதியாகமத்தில் அதிகபட்சமாக மெத்தூசலா 969 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக யோசேப்பு 110 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.

"இயேசு உண்மையான தெய்வம் என எப்படியெல்லாம் மெச்சுகிறார்கள்... ஆனால் அவரது போதனைகளை விளக்கும் பைபிளைப் பாருங்கள்... 969 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ்ந்தானாம்...! இதெல்லாம் எப்படி நம்ப முடியும்...?" என நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில், தொடர்ந்து படிக்கவும்...

ஆபிரகாம்

மெத்தூசலா 969 ஆண்டுகளும், ஆதாம் 930 ஆண்டுகளும், சேத் 912 ஆண்டுகளும், கேனான் 910 ஆண்டுகளும் வாழ்ந்தனர் என பல பேரின் வயதுகளை ஆதியாகமம் குறிப்பிடுகிறது... உண்மை தான், ஆனால் அதன் முக்கிய கதாநாயகரான ஆபிரகாமின் வயது 175 ஆண்டுகள் மட்டுமே...! இன்னொரு வியப்பு உங்களுக்கு காத்திருக்கிறது, கர்த்தர் ஆபிரகாமிடம் சொன்ன வசனங்களை கீழே படிக்கவும்,

ஆதியாகமம் 18:10-15 - அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத் திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடார வாசலில் இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போயிற்று. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத் திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

இந்த உறையாட‌ல் நடக்கும் போது சாராளும், ஆபிரகாமும் 100 வயதைக் கூட தாண்டவில்லை (ஆதியாகமம் 21:5). ஆனால் அவர்கள் முதிர்ந்த வயதுள்ளவர்கள், ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போயிற்று என ஆதியாகமம் சொல்கிறது. ஆதியாகமத்தில் முதிர்ந்த வயதுள்ளவர்கள் என சொல்லப்பட்டவர்கள் ஆபிரகாமும் சாராளும் மட்டும் தான்...!

நோவா 500 வயதில் பிள்ளைபெற்று 950 ஆண்டுகள் வாழ்ந்தார், ஆதாம் 130 வயதில் பிள்ளைபெற்று 930 ஆண்டுகள் வாழ்ந்தார், அது போல பல மக்களை ஆதியாகமம் எடுத்துக் கூறுகிறது... ஆனால் இவர்கள் யாரையும் முதிர்ந்த வயதுள்ளவர்கள் என்று பைபிள் அழைக்கவில்லை, நூறு வயதைத் தாண்டி அவர்கள் பிள்ளை பெற்றனர் என்பதைக் கண்டு வியக்கவில்லை.

ஆனால் நூறு வயதைக் கூட தாண்டாத ஆபிரகாமையும் சாராளையும் முதிர்ந்த வயதுள்ளவர்கள், பிள்ளை பாக்கியம் கொள்ள காலம் சென்றவர்கள் என சொல்வது ஏன்? இதே விஷயத்தில் தான் பல ஆதிகால திருச்சபை தந்தைகள் வியப்புக்குள்ளானார்கள். [1]

ஆ) தவறான போதனைகள்
ஆதியாகமம் கூறும் காலங்களின் பின்னால் உள்ள குறிப்புகளை அன்றைய கிறித்தவர்களால் அறிய முடியாதிருந்தது, ஏனெனில் அன்றைய நாட்களில் ஆதியாகமத்திற்கு போதுமான அகழ்வராய்ச்சித் தடயங்களோ, வரலாற்றுச் செய்திகளோ இல்லை. எனவே, ஆதியாகமத்தில் கூறப்பட்ட காலங்களைக் கண்டு வியந்தாலும், அதற்கு பின்பு ஏதோ குறிப்புகள் மறைந்துள்ளன என சந்தேகித்தாலும் அவை என்ன என்று தெளிவாக அவர்களால் அறிய முடிய‌வில்லை. அதனால் ஏகப்பட்ட தவறான கருத்துகள் வெளிவந்தன. முக்கியமாக கீழுள்ளவைகளைச் சொல்லலாம்.

1) வானமும் பூமியும் சரியாக ஆறு நாளில் சிருஷ்டிக்கப்பட்டது (6 * 24 மணி நேரங்கள்).

2) நோவா கால ஜலப்பிரளயத்திற்கு முன்பு வரை மனிதர்கள் 900 ஆண்டுகள் வரை வாழ்ந்தனர், ஜலப்பிரளயத்தின் போது மனிதர்களின் ஆயுசு நாட்களை தேவன் 120 ஆண்டுகளாகக் குறைத்துவிட்டார். அதன் காரணமாக, மனிதர்களின் வாழ் நாட்கள் வீழ ஆரம்பித்து இன்றைய நிலைக்கு வந்தது.

3) அண்டம் உருவாகி 6000 வருடங்கள் தான் ஆனது என பைபிள் சொல்கிறது.

மேற்கண்ட மூன்று கருத்துகளையும் இன்றுவரை பல கிறித்தவர்கள் முழு மனதோடு ஏற்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் மேல் மக்கள் கொண்டுள்ள தூய விசுவாசம் மகிழ்ச்சிக்குரியது. ஆனால் மேற்கண்ட மூன்று தகவல்களும் பைபிள் படி சரியானவையா என்றால் இல்லை. ஏன்?

1) தேவன் அகில உலகத்தையும் ஆறு நாட்களில் சிருஷ்டித்தார் என பைபிள் சொல்வது உண்மைதான். ஆனால் அந்த ஆறு நாட்களும் நாம் எண்ணுகின்ற படி 24 மணி நேரங்கள் அல்ல, மனிதனுக்கு 24 மணி நேரங்கள் ஒரு நாள். ஆனால் கர்த்தருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தான் ஒரு நாள். பைபிள் இதனைத் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது,
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம் - 2 பேதுரு 3:8
தேவன் தன் சிருஷ்டிப்பின் இறுதியில் தான் மனிதனை படைத்தார் (ஆதி 1:24 31). மனிதனை படைத்ததோடு அவரது சிருஷ்டிப்பு முடிந்தது. எனவே, முதல் ஆறு நாட்களும் கர்த்தரின் பார்வையில் தான் நாட்கள், நமக்கு அது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள். முதல் ஆறு நாட்களையும் 6*24 மணி நேரங்களாக கருதுவது பைபிள் படி தவறு.

2) நோவா காலத்தில் தேவன் மனிதனின் ஆயுசு நாட்களை குறைத்ததாக எந்த வசனமும் இல்லை. ஆதியாகமச் செய்திகளை எழுதி முடித்த மோசே சரியாக தன் 120 வயதில் இறந்துவிட்டார். 120 வயதைக் கடந்து வாழ்ந்ததாக பைபிள் கூறும் அத்தனை நபர்களும் மோசே இறப்பதற்கு முன்பு பிறந்தவர்கள். இது மெய்தான். அதற்காக, தேவன் மனிதனின் ஆயுசு நாட்களை 120 ஆண்டுகளாக வரையறுத்தார் என்பது தவறு. 122 வயதைக் கடந்து வாழ்ந்ததாக "ஜென்னி கால்மென்ட்" என்கிற பெண் தகுந்த ஆதாரங்களோடு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார் [2]. அவ்வளவு ஏன்? மோசேக்கு பிறகு பிறந்து 120 வயதைக் கடந்து வாழ்ந்த ஒருவரை பைபிளே குறிப்பிடுகிறது (2 நாளாகம்ம் 24:15).

உண்மை என்ன? மனிதனின் வாழ்நாட்கள் 120 ஆண்டுகள் என தேவன் சொல்லவில்லை, மாறாக அவன் இருக்கப் போகிற நாட்கள் 120 வருஷம் என்றே சொன்னார். பைபிள் கூறுகின்ற வசனத்தைக் காணலாம்,
"என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்"- ஆதியாகமம் 6:3
இக்காரியம் சொல்லப்பட்டு 120 ஆண்டுகள் கழித்து மனிதர்கள் எல்லாம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தார்கள். நோவா காலத்தில் ஏற்பட்ட‌ ஜலப்பிரளயத்தைக் குறிக்க சொல்லப்பட்ட வசனம் இது, மனிதனின் வாழ்நாட்களைக் குறிக்க அல்ல.

3) முதல் இரண்டு கூற்றுகள் தான் மூன்றாம் கூற்றுக்கு அடித்தளம், ஆனால் முதல் இரண்டு செய்திகளே பைபிள் படி சரியல்ல என கண்டோம், எனவே உலகம் தோன்றி 6000 வருடங்கள் தான் ஆனது என்ற செய்தியும் தவறு தான். அதற்கான வசனங்கள் பைபிளில் ஒன்று கூட இல்லை. எனவே, சிருஷ்டிப்பு ஆறு நாட்களில் (6*24 மணி நேரங்கள்) முடிந்தது, நோவா காலத்தில் மனிதனின் ஆயுசு நாட்களை தேவன் குறைத்துவிட்டார், பூமியின் வயது 6000 ஆண்டுகள் என்ற இந்த செய்திகள் எல்லாம் வேதத்திற்கு புறம்பானவை, பொருந்தாதவை. இவையெல்லாம் ஆதியாகமம் முற்பிதாக்களுக்கு கூறும் வயது விவரங்களுக்கு பொருளறிய தவறிய சிலரால் தூய திருச்சபைக்குள் புகுந்த தவறான போதனைகள்.

இ) ஆதியாகமம் கூறும் வரலாற்று பின்னணி
சரி, அப்படியென்றால் பைபிள் கூறுகின்ற முற்பிதாக்களின் காலங்களுக்கு என்ன பொருள்?

ஆதியாகமத்தில் வருகின்ற காலங்களை வரலாற்று பின்னணி அறிந்து அதற்கேற்ற வகையில் கண்டால் ஒழிய அதன் அர்த்தம் நமக்கு விளங்காது. ஆதியாகமத்தின் வரலாற்று பின்னணியை முதலில் காண்போம்...

வானத்தையும் பூமியையும் படைத்த உண்மையான‌ தேவன் ஒருவரே. அவரே சர்வ வல்லமையுள்ள கர்த்தர். ஆனால், அவரது சந்நிதியில் இருந்து மனிதர்கள் விலகி பாவத்தில் பிரவேசிக்கின்றனர். காலப்போக்கில் மதங்கள், சிலைகள், புராணங்கள் என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை எழுந்து உண்மையான தேவன் யார் என்பதே உலகத்தில் தெரியாமல் போகிறது. எனவே, பாவத்தில் ஜீவிக்கும் மனுகுலத்தை மீட்டெடுக்க தேவன் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அவர் தான் ஆபிரகாம். அவரது சந்ததியைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் உலக மக்கள் எல்லாரையும் தன்பால் கொண்டு வருவேன் என தேவன் உடன்படிக்கைச் செய்தார். இதனை கீழுள்ள வசனத்தில் காணலாம்,

ஆதியாகமம் 22:18 - "நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன்"

ஆபிரகாமும் உண்மையான தேவனை அறியாதவராகவே இருந்தார், அவரிடம் தேவன் தன்னை வெளிப்படுத்துகின்றவரை அவரது குடும்பம் மெசப்பொத்தோமியாவில் விளங்கி வந்த அந்நிய தெய்வங்களையும் சிலைகளையும் அர்சித்து வந்தார்கள் என பைபிள் சொல்கிறது (யோசுவா 24:2). தேவனிடம் இருந்து அழைப்பு அவருக்கு ஏற்பட்ட பிறகு அவர் தன் நம்பிக்கைகளையும் தான் வசித்து வந்த மெசப்பொத்தோமியா தேசத்தையும் கைவிட்டு கர்த்தர் காட்டிய இடத்திற்கு (தற்போதைய இஸ்ரேல்) புறப்பட்டு வந்தார். அதன் பின்பு, ஆபிரகாமின் மகனான ஈசாக்கு, ஈசாக்கின் மகனான யாக்கோபு என இரண்டு தலைமுறைகள் விவரித்துச் சொல்லப்பட்டுள்ளது. யாக்கோபுக்கு தேவன் இஸ்ரவேல் என பெயர் சூட்டினார். இஸ்ரவேலுக்கு 12 புத்திரர் பிறந்தார்கள். அதில் ஒருவரான யோசேப்பின் கதையோடு ஆதியாகமம் முடிகிறது. யோசேப்பு இஸ்ரவேலுக்கு பிரியமாயிருப்பதைக் கண்டு பிற மகன்கள் வெறுப்புற்றனர். அதனால் அவரை அடிமையாக அவர்கள் விற்றுவிட, யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு எகிப்து ராஜனின் அரசவையில் முக்கிய அதிகாரியாக யோசேப்பு மாறினார். அப்பொழுது கிழக்கத்திய பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டுவிட எகிப்தில் தானியம் கொள்ளும்படி சுற்றுப்புற மக்கள் அங்கு வந்தார்கள், அதில் யோசேப்பின் சகோதரர்களும் அடங்குவார்கள். அங்கு அவர்கள் யோசேப்பைச் சந்திக்க நேர்கிறது, யோசேப்பு தன் சகோதரர்கள் தனக்கு இழைத்த தீங்கை மன்னித்தார், எனவே யோசேப்போடு எகிப்திலேயே தங்கி விட அவர்கள் எல்லாரும் முடிவு செய்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம் மெசப்பொத்தோமியாவை விட்டு எகிப்துக்கு வந்து சேர்ந்தது. இதோடு ஆதியாகமம் முடிவடைகிறது.

ஆதியாகமத்தின் கதை நாயகர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களே. அவர்களை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்? ஏன் தேர்ந்தெடுத்தார்? அவர்களைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்ற செய்திகளைச் சொல்லும் வகையில் ஆதியாகமம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆதியாகமத்தில் இரண்டே இடங்களில் தான் வயது விவரங்களோடு தலைமுறை பட்டியல் சொல்லப்பட்டுள்ளது (ஆதியாகமம் 5, ஆதியாகமம் 11). முதலில் பைபிளின் முதல் மனிதனான ஆதாம் முதல் நோவா வரையும், பின்பு நோவா முதல் ஆபிரகாம் வரையும். ஆதாமுக்கு இருந்த இன்னொரு மகனான காயீனுக்கான வம்ச வரலாறு வயது விவரங்களோடு சொல்லப்படவில்லை. ஏனெனில் ஆபிரகாம் ஆதாமின் இளைய மகனான சேத்தின் வம்ச வழியாக வந்தவர். எனவே சேத் வழியான தலைமுறைப் பட்டியல் மட்டும் வயது விவரங்களோடு சொல்லப்பட்டு நோவாவோடு முடிவடைகிறது (ஆதியாகமம் 5). அடுத்து நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் மனிதர்கள் எல்லாம் மடிந்துவிட்டனர். எனவே தப்பி பிழைத்த நோவாவுக்கு இருந்த மூன்று மகன்களால் மீண்டும் பூமியில் மனிதர்கள் பெருகினர். ஆனால் நோவாவின் ஒரு மகனான சேமின் வம்ச வரலாறை மட்டும் வயது விவரங்களோடு பைபிள் சொல்ல ஆரம்பித்து ஆபிரகாமில் வந்து முடிக்கிறது (ஆதியாகமம் 11). இம்முறையும் பைபிள் நோவாவின் பிற மகன்களின் வம்ச வரலாறை வயது விவரங்களோடு சொல்லவில்லை. வயது விவரங்களோடு சொல்லப்பட்ட இரண்டு தலைமுறைகளும் ஆபிரகாமின் வம்ச வரலாறைப் பதிவு செய்யும் நோக்கத்துடனே எழுதப்பட்டவை. இந்த இரண்டு பட்டியல்களில் தான் 930, 912, 969 என அதிகப்படியான‌ வயதுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஈ) சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம்
இனி மீண்டும் முதல் கேள்விக்கே வருவோம்... 900 ஆண்டுகள் வாழ்ந்த முற்பிதாக்களை எல்லாம் விட்டுவிட்டு நூறு ஆண்டுகளைக் கூட‌ எட்டாத ஆபிரகாமையும் சாராளையும் பைபிள் ஏன் முதிர்ந்த வயதுள்ளோர் என்கிறது?

ஏனெனில் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள வயதுகள் எல்லாம் நாம் இன்றைய கணக்கில் காண்கின்ற வருடங்களோ, மாதங்களோ அல்ல. எகிப்து தேசத்தில் இஸ்ரவேலர்கள் புகுந்த பின்பு தான், அவர்கள் நம்முடைய தற்போதைய நடைமுறைகளுக்கு சிறிது மாறினார்கள், அதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்தது தங்களது சுமேரிய (மெசப்பொத்தோமிய) பண்பாடுகளையே.

கிழக்கத்திய நாகரீகங்களுள் முக்கியமானவை எகிப்திய நாகரீகமும், மெசப்பொத்தோமிய நாகரீகமும். நைல் நதியைச் சுற்றி எகிப்திய நாகரீகமும், இதெக்கேல்(டைகிரிஸ்) மற்றும் ஐபிராத்து(யூபிரடஸ்) நதிகளைச் சுற்றி மெசப்பொத்தோமிய(சுமேரிய) நாகரீகமும் செழித்தோங்கின. எகிப்தியர்களும், மெசப்பொத்தோமியர்களும் கணிதத்திலும், வான சாஸ்திரத்திலும், விவசாயத்திலும், இலக்கியத் துறையிலும், இறை நம்பிக்கைகளிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தார்கள். ஆனால் சீராக அல்ல, எகிப்தியர்கள் பயன்படுத்திய நாள்காட்டி சூரிய நாள்காட்டி (365 நாட்கள்) [3], மெசப்பொத்தோமியர்கள் பயன்படுத்தியது சந்திர நாள்காட்டி (354 நாட்கள்), எகிப்தியர்கள் பயன்படுத்தி வந்த எண்கள் பத்தை அடியாகக் கொண்டது [4], மெசப்பொத்தோமியர்கள் பயன்படுத்தி வந்த எண்கள் அறுபதை அடியாகக் கொண்டது [5]. கணிதத்தைத் தவிர கலாச்சாரம், இலக்கியங்கள், இறை நம்பிக்கைகள் ஆகியவற்றிலும் பெரிய அளவில் வித்தியாசங்கள் காணப்பட்டன.

ஆனால், மெசப்பொத்தோமியாவில் விளங்கி வந்த பல பழக்க வழக்கங்கள் இன்று காணாமல் போய்விட்டது, பலவற்றை பிற நாகரீகங்களான எகிப்து & சிந்து சமவெளி நாகரீகங்கள் மேற்கொண்டு விட்டன. உதாரணத்திற்கு நாம் தற்போது பயன்படுத்தி வரும் 365 நாட்கள் கொண்ட சூரிய நாள்காட்டியையும், பத்தை அடியாகக் கொண்ட இந்து அரபு எண்ணுருக்களையும் (இந்தோ அராபிக் எண்கள்) சொல்லலாம். எப்படி மெசப்பொத்தோமிய நாகரீகத்தில் விளங்கி வந்த பல பழக்க வழக்கங்கள் நம்மால் கைவிடப்பட்டு பிற நாகரீக வழக்கங்களை ஏற்றுள்ளோமோ அது போலவே முற்பிதாக்கள் காலத்தில் நிகழ்ந்தது. தங்களது சுமேரிய நடைமுறையை விட்டு எகிப்து நடைமுறைக்கு மாறினார்கள். இதனை ஆதியாகமத்தில் தெள்ளத் தெளிவாக காணலாம். ஆதியாகமம் மெசப்போத்தோமிய பிரேதசங்களில் ஆரம்பித்து எகிப்து நாட்டில் முடிவடைகிறது. எகிப்தில் முடிவடையும் போது, இஸ்ரவேலர்களிடம் பல‌ எகிப்திய பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன.

1) முதலாவதாக, யோசேப்பு பார்வோனைச் சந்திக்க செல்லும் போது சவரஞ் செய்து கொண்டதாக பைபிள் கூறுகிறது (ஆதியாகமம் 41:14). சவரஞ் செய்வது எகிப்திய பழக்கம். எகிப்தியர்கள் சுத்தமாக தங்கள் மீசை தாடி மயிர்களைச் சரைத்து வைத்திருப்பார்கள். சுமேரியர்கள் அவ்வளவாக சவரஞ் செய்ய மாட்டார்கள். இன்று கூட இஸ்லாமிய யூத தேசங்களில் பல இறை நம்பிக்கையாளர்கள் சவரஞ்செய்யாமல் நீண்ட தாடிகளோடு இருப்பதைப் பார்க்கலாம்.

2) யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் உடல்களை சுகந்தவர்க்கமிட்டார்கள் எனவும், பதப்படுத்தப்பட்ட யோசேப்பின் உடலை பெட்டியில் வார்த்து எகிப்தில் வைத்தார்கள் எனவும் ஆதியாகமம் சொல்கிறது (ஆதியாகமம் 50:2,26). உடல்களை மம்மிகளாக்கி வைப்பது எகிப்தியர்களின் பழக்கம்.

3) முக்கியமாக, யோசேப்பு 110 வயதுமிக்கவராய் எகிப்தில் இறந்தார் என ஆதியாகமத்தில் காணலாம் (ஆதியாகமம் 50:22,23). எகிப்தில் 110 வயது வாழ்ந்தவர்கள் ஒரு பூரண வாழ்வை வாழ்ந்தவர்களாக போற்றப்பட்டார்கள். [6]

ஆதியாகமம் 930 வயதைக் கூற ஆரம்பித்து 110 வயதில் முடிவடைகிறது. அதாவது இங்கு பைபிள் சுமேரிய நாள்காட்டிகளை விட்டு எகிப்திய நாள்காட்டிக்கு மாறுகிறது. ஆதியாகமத்திற்கு பிறகு வருகின்ற எந்த 65 நூல்களும் 140 வயதைக் கடந்து வாழ்ந்த எந்த நபர்களையும் குறிப்பிடவில்லை.

உ) மெசப்பொத்தோமியர்களின் வழக்கங்கள்:
இஸ்ரவேலர்கள் எகிப்துச் செல்வதற்கு முன்பு அவர்களும் அவர்களது முன்னோர்களும் மெசப்பொத்தோமியாவில் வசித்து வந்தனர் என ஆதியாகமம் சொல்வதாக கண்டோம். அவர்கள் மெசப்பொத்தோமியாவில் இருந்த காலத்தில் நிகழ்ந்ததாக பைபிள் கூறுகின்ற சம்பவங்கள் எல்லாம் அப்பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

ஆதியாகமம் கூறுகின்ற படைப்பின் செய்தி, ஆதாம் ஏவாள் கதை, நோவா ஜலப்பிரளயம் போன்ற‌ முக்கிய‌ சம்பவங்கள் எல்லாம் மெசப்போத்தோமிய நாகரீக பகுதிகளில் கிடைத்த களிமண் பலகைகளோடு ஒத்து காணப்படுகின்றன (எ.கா கில்கமேஷ் காப்பியம்). அந்த களிமண் பலகைகள் எல்லாம் கி.மு 3000 - கி.மு 1500 என்ற காலக் கட்டத்தைச் சார்ந்தவைகள். [7]

கி.மு 1500 ஆண்டுக்கு பின்பு தான் ஆதியாகமம் எழுதப்பட்டது என்பது யூதர், கிறித்தவர்களின் நம்பிக்கை, வரலாற்று ஆய்வார்களும் அப்படித் தான் ஏற்கின்றனர். எனவே, ஆதியாகமம் எழுதப்படுவதற்கு முன்பே படைப்பு, ஆதாம் ஏவாள் கதை, நோவா ஜலப்பிரளயம் குறித்த பைபிள் செய்திகளுக்கு ஒத்த நம்பிக்கைகள் மெசப்பொத்தோமியாவில் நெடுங்காலமாக விளங்கி வந்ததை அறியலாம். ஆதியாகமம் தீடீரென எழுதப்பட்ட ஒரு கதை அல்ல. அது அக்கால மக்களால் நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த செய்திகளின் தொகுப்பு. அத்தொகுப்பு இயேசுவால் உண்மை என உறுதிசெய்யப்பட்டது (லூக்கா 24:22) என்பது கிறித்தவ‌ நம்பிக்கை. இயேசுவால் உறுதிசெய்யப்பட்ட அந்த சுமேரிய நம்பிக்கைகளுக்கு உள்ள அறிவியல், வரலாற்று ஆதாரங்களை நாம் தனிக் கட்டுரைகளில் காண்போம். இப்போது இந்த தலைப்பில் முன்னேறிச் செல்லலாம்.

சுமேரிய அரசாட்சி தொகுப்பு

எப்படி, ஆதாம் ஏவாள் கதை, நோவா ஜலப்பிரளயம், சிருஷ்டிப்பு ஆகிய நம்பிக்கைகளுக்கு சுமேரியாவில் இருந்து ஆதாரங்கள் கிடைக்கின்றனவோ, அதைப் போலவே ஆதியாகமத்தில் காணப்படுகின்ற போர்கள், தலைமுறைப் பட்டியல்கள், பாரம்பரியங்கள், பஞ்சம், பாபேல் கோபுரம் ஆகியவற்றுக்கு ஒத்த செய்திகளைக் கொண்ட களிமண் பலகைகள் கிடைத்துள்ளன. அதில் ஆதியாகமத்தின் தலைமுறைப் பட்டியயோடு பொருந்தும் ஒரு வரலாற்றுப் பதிவேடைக் காணலாம். சுமேரியாவை அரசாண்ட அரசர்களின் ஆட்சிக் காலத்தைப் பட்டியலிடும் சில களிமண் பலகைகளில் இருந்து,

(பரலோக‌த்தில் இருந்து ஆட்சி வந்த‌ பின்பு,
அரசு எரிதுக்கிற்கு மாற்றப்பட்டது,
எரிதுக்கில் அலுலிம் அரசராகி 28800
ஆண்டுகள் அரசாண்டார்.)

அலுலிம் - 28800 ஆண்டுகள் (8 சார்கள்)
அலல்ங்கர் - 36000 ஆண்டுகள் (10 சார்கள்)

(எரிதுக் வீழ்ந்தது, அரசாட்சி பத்திபிராவுக்கு மாறினது)

என்மென்லுனா - 43200 ஆண்டுகள் (12 சார்கள்)
என்மெகலனா - 28800 ஆண்டுகள் (8 சார்கள்)
துமுசித் - 36000 ஆண்டுகள் (10 சார்கள்)

(பத்திபிரா வீழ்ந்தது, அரசாட்சி லாராகிற்கு மாறினது)

என்சிபத்சிதனா - 28800 ஆண்டுகள் (8 சார்கள்)

(லாராக் வீழ்ந்தது, சிம்பிருக்கு அரசாட்சி மாறினது)

என்மெந்துரனா - 21000 ஆண்டுகள் (5 சார்கள், 5 நெர்கள்)*

(சிம்பிர் வீழ்ந்தது, சுருப்பக்கிற்கு அரசாட்சி மாறினது)

உபரதுது 18600 - ஆண்டுகள் (5 சார்கள், 1 நெர்)

(பின்பு, வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
வெள்ளம் முடிந்த பின், பரத்தில் இருந்து ஆட்சி வந்தது.
அரசாட்சி கிஷ்ஷில் இருந்து நடத்தப்பட்டது.)

ஜுசுர் - 1200 ஆண்டுகள்
குல்லாசினாபெல் - 960 ஆண்டுகள்
நங்கிஷ்லிஷ்மா - 670 ஆண்டுகள்
எந்தாரானா - 420 ஆண்டுகள்
பாபும் - 300 ஆண்டுகள்
புவன்னும் - 840 ஆண்டுகள்
கலிபும் - 960 ஆண்டுகள்
காலுமும் - 840 ஆண்டுகள்
சுகாகிப் - 900 ஆண்டுகள்
ஆதாப் - 600 ஆண்டுகள்
மஷ்தா - 840 ஆண்டுகள்
.
.
.
.
.
.
.
இல்தாசும் - 1200 ஆண்டுகள்
என்மெபரகேசி - 900 ஆண்டுகள்*
அகா - 625 ஆண்டுகள்
.
.
.
.
.
.
.

(இசின் சாம்ராஜ்ஜியம்)
இஷ்பியெரா - 33 ஆண்டுகள்
சுலிஷு - 20 ஆண்டுகள்
.
.
.
.
.
.
உர்துகுகா - 4 ஆண்டுகள்
சுயன்மாகிர் - 11 ஆண்டுகள்
தாமிக் இலிசு - 23 ஆண்டுகள்

(மேலே "...." என குறிக்கப்பட்ட இடைவெளிகளில் நிறைய அரசர்கள் இடம்பெறுகிறார்கள். இப்பதிவிற்கு தேவையான தலைமுறைகள் மட்டும் இங்கு எழுதப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு முன்பு இடம்பெறும் அரசர்களின் காலங்களுக்கு அருகில் உள்ள அடைப்புக்குறிகளில் சார், நெர் என இரண்டு வார்த்தைகள் உள்ளதைக் கவனிக்கவும். சார், நெர் என்பது சுமேரியாவில் விளங்கி வந்த எண்ணிக்கைகள், சார் என்றால் 3600, நெர் என்பது 600)

மேலே உள்ள தலைமுறை பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கின்ற முக்கியமான செய்திகள்,

1) பெருவெள்ளம் நிகழ்ந்ததாக சுமேரியர்கள் எழுதியுள்ளார்கள்

2) பெருவெள்ளத்திற்கு முன்பு மெசப்பொத்தோமியாவை 8 அரசர்கள் ஆண்டுள்ளனர். இப்பட்டியலில் தரப்பட்டிருப்பது அவர்களின் வயது அல்ல, அவை அரசாட்சிக் காலங்கள். அந்த அரசாட்சிக் காலங்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதைக் கவனிக்கவும். அதிலுள்ள எட்டு எண்களும் 3600(சார்), 600(நெர்) என்ற இரண்டு அளவுகளால் எழுதப்பட்டவை.

3) ஜலப்பிரளயத்திற்கு பின்பு அரசாட்சிக் காலங்கள் அதிரடியாக குறைந்திருக்கிறது. அதற்கு பின்பு வருகின்ற பெரும்பாலான எண்களை சார்(3600), நெர்(600) என்ற அளவுகளில் எழுதமுடியவில்லை.

4) காலங்காலமாக புது புது அரசர்கள் தோன்ற தோன்ற அவர்களின் பெயர்களும் காலங்களும் இணைக்கப்பட்டுக் கொண்டே வரப்பட்டன. கடைசியாக கிடைத்த களிமண் பலகை "இசின்" என்ற சாம்ராஜ்ஜியத்தின் வம்ச வரலாறை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இசின் சாம்ராஜ்ஜியத்தின் அரசர்கள் சுமேரியாவின் பாரம்பரிய அரசர்களின் வழி வந்தவர்களே என்பதை நிருவுவதே கடைசி பட்டியல் எழுதப்பட்டதன் முக்கிய‌ நோக்கம். [8]

5) தலைமுறைப் பட்டியலில் காணப்படும் ஏழாவது அரசர் என்மெந்துரனா* பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் எனவும், இறை ரகசியங்களைக் கேட்டறிந்தார் எனவும் சுமேரியர்கள் நம்பினார்கள். என்மெந்துரனா சிப்பர் என்கிற ஊரைச் சார்ந்தவர், சூரிய வழிப்பாட்டிற்கு பெயர்பெற்ற நகரம். [9]

6) மேலுள்ள பட்டியலில் காணப்படும் அரசர்கள் அனைவரும் புராணக் கதாப்பாத்திரங்கள் அல்ல, அவர்களில் சிலர் உண்மையாக வாழ்ந்திருக்கின்றனர் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் மிகப் பழமையான மன்னன் என்மெபரகேசி*. இவர் அரசாண்ட காலம் 900 ஆண்டுகள் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. [10]

7) சுமேரியர்கள் அறுபதை அடியாகக் கொண்ட எண்ணிக்கையை (செக்ஸாடெசிமல் முறை) பயன்படுத்தி வந்தனர். இன்றுக்கூட 360 டிகிரி வட்டம், 60 வினாடிகள் (1 நிமிடம்), 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) என சுமேரியர்களின் செக்ஸாடெசிமல் முறைகள் சில‌ பழக்கத்தில் இருக்கின்றன.

8) சுமேரியர்கள் 60 என்ற எண்ணை புனிதமாகக் கருதினார்கள். அதன் காரணமாகவே பெருவெள்ளத்திற்கு முன்பு அரசாண்ட மன்னர்களின் காலத்தை சார்(3600), நெர்(600) என்ற தொகைகளில் எழுதினார்கள். அனு என்கிற மெசப்பொத்தோமியாவின் தலைக்கடவுளுக்கு சுமேரியர்கள் அளித்த எண் 60. அக்கால சுமேரிய புனித நூல்களில் வருகின்ற எண்கள் பெரும்பாலும் குறிப்புகளும், அடையாளங்களுமே [11][12]. அவைகளைத் தற்போது விளங்கி வரும் நடைமுறையோடு பொருத்தினால் அதற்குப் பொருளில்லை. உதாரணத்திற்கு, என்மெபரகேசி அரசர் வரலாற்றில் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், அவர் 900 ஆண்டுகள் அரசாண்டார் என சுமேரியர்கள் எழுதியுள்ளது தற்போதைய வழக்கத்தோடு பொருந்தாது, அவரது ஆட்சியை புண்ணியமாக கருத 900 ஆண்டுகள் (15 * 60) என சுமேரியர்கள் குறித்துள்ளனர்.

உ) பைபிள் கூறும் தலைமுறை பட்டியல்
எகிப்துக்கு குடிபெயர்கின்ற வரை முற்பிதாக்கள் குறித்த செய்திகள் எல்லாம் மெசப்பொத்தோமியாவில் தான் பெரும்பாலும் நிகழ்ந்தது எனவும், முற்பிதாக்களின் காலங்களில் மெசப்பொத்தோமியர்கள் எண்களை எப்படி பயன்படுத்தினார்கள் எனவும் மேலே தெளிவாகக் கண்டிருப்பீர்கள். இது அப்படியே பைபிள் தருகின்ற தலைமுறைப் பட்டியலோடு பொருந்துவதை இனி காணலாம்.

1) சுமேரியர்களுக்கான‌ புனித எண் "60", அவர்களில் ஒரு பிரிவினரான எபிரேயர்களுக்கு "7" என்பதும் புனித எண். எபிரேயர்கள் ஏழாம் நாளை பரிசுத்தமாகக் கடைபிடித்து வந்தது நாம் அறிந்ததே. சுமேரியர்கள் சார்களையும்(3600), நெர்களையும்(600) பயன்படுத்தி பெருவெள்ளத்திற்கு முன்பு அரசாண்ட மன்னர்கள் காலத்தை எழுதியிருப்பது போல பைபிளில் பெருவெள்ளத்திற்கு முன்பு வாழ்ந்த முற்பிதாக்களின் காலங்கள் 60, 7 என்ற தொகைகளில் மாதங்களாகவும் வருடங்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது, 60 மாதங்கள் என்பது 5 வருடங்கள். சுமேரிய மொழியில் அறுபதை "சொஸ்" எனவும் ஏழை "சபத்" எனவும் ஐந்தை "ஹம்சம்" எனவும் அழைப்பார்கள்.

ஆதாம் 930 ஆண்டுகள் = 15 சொஸ், 5 ஹம்சம்
சேத் 912 ஆண்டுகள் = 15 சொஸ், 1 சபத், 1 ஹம்சம்
ஏனோஸ் 905 ஆண்டுகள் = 15 சொஸ், 1 ஹம்சம்
கேனான் 910 ஆண்டுகள் = 15 சொஸ், 2 ஹம்சம்
மகலாலெயேல் 895 ஆண்டுகள் = 14 சொஸ், 11 ஹம்சம்
யாரேத் 962 ஆண்டுகள் = 15 சொஸ், 11 ஹம்சம், 1 சபத்
ஏனோக்கு 365 ஆண்டுகள் = 6 சொஸ், 1 ஹம்சம்
மெத்தூசலா 969 ஆண்டுகள் = 15 சொஸ், 11 ஹம்சம், 2 சபத்
லாமேக்கு 777 ஆண்டுகள் = 12 சொஸ், 10 ஹம்சம், 1 சபத்
நோவா 950 ஆண்டுகள் = 15 சொஸ், 10 ஹம்சம்

2) எப்படி பெருவெள்ளத்திற்கு பின்பு வருகிற சுமேரியாவின் அரசாட்சிகளை சார்களிலும், நெர்களிலும் கச்சிதமாக தொகுக்க முடியவில்லையோ அதைப் போலவே, ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஆதியாகமம் 11ஆம் அதிகாரத்தில் காணப்படும் முற்பிதாக்களின் காலங்களை 60,7 என்ற தொகையில் கச்சிதமாக எழுத இயலவில்லை. பெருவெள்ளத்திற்கு பிறகு சுமேரிய அரசர்களின் ஆட்சிக் காலம் அதிரடியாகக் குறைகிறது, முற்பிதாக்களின் காலங்களும் அதிரடியாகக் குறைகிறது...

3) சுமேரியாவின் ஏழாவது அரசர் என்மெந்துரனா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார், அவர் சூரிய வழிபாட்டிற்கு பெயர்பெற்ற சிப்பர் ஊரைச் சார்ந்தவர் என கண்டோம். அதைப் போலவே ஏழாவது முற்பிதாவான ஏனோக்கு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என பைபிள் கூறுகிறது (ஆதியாகமம் 5:24). ஏனோக்கின் வயது 365 ஆண்டுகள், சூரியனைச் சுற்றிவர பூமிக்கு 365 நாட்கள் தேவை...! நிச்சயமாக ஏழாம் தலைமுறையைக் குறித்து சுமேரியர்களிடம் ஒத்த நம்பிக்கை நெடுங்காலமாக நிலவி வந்தது உறுதி.

4) இசின் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தை நிருவும் நோக்கிலேயே கடைசி களிமண் பலகை சுமேரியர்களால் எழுதப்பட்டது என கண்டோம். அவ்வாறே ஆபிரகாமின் வம்ச வரலாற்றை நிருவும் நோக்கத்துடன் பைபிளில் 2 தலைமுறைகள் வயது விவரங்களோடு எழுதப்பட்டுள்ளன. சேத், சேம் ஆகியோரது வம்ச வரலாறை மட்டும் பைபிள் (ஆதியாகமம் 5,11) வயது விவரங்களோடு கூறுவதில் இருந்து இது தெளிவாகும்.

ஆபிரகாம் காட்சிக்கு வந்த பிறகு பைபிள் இன்னும் சுவாரசியமாகிறது...

ஆபிரகாம் வாழ்ந்த காலம் 175 ஆண்டுகள்
ஈசாக்கு வாழ்ந்த காலம் 180 ஆண்டுகள்
யாக்கோபு வாழ்ந்த காலம் 147 ஆண்டுகள்

தேவன் தன் பணிக்காக ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்த பின்பு அவருக்கு குமாரர்கள் உண்டானார்கள். ஆபிரகாமின் முதல் மகன் இஸ்மவேல். ஆனால் தேவன் இளைய மகனான ஈசாக்கின் வம்சத்தை தெரிந்து கொண்டார், அதன் பின்பு ஈசாக்குக்கு 2 குமாரர்கள் உண்டானர்கள். ஈசாக்கின் முதல் மகன், பிரியமான மகன் ஏசா. ஆனால் இளைய மகனான‌ யாக்கோபைத் தான் தேவன் தெரிந்து கொண்டார். யாக்கோபுக்கு இஸ்ரவேல் என பெயர்சூட்டி அவன் மூலம் ஒரு தேசத்தை கர்த்தர் எழுப்பினார் என பைபிள் சொல்கிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வழி சந்ததியே தேவன் தெரிந்து கொண்ட சந்ததி என்பதை அவர்கள் மூவரின் காலங்கள் மூலம் பைபிள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. எப்படி...? கீழே காணவும்,

ஆபிரகாம் 175 ஆண்டுகள் = 5 * 5 * 7

ஈசாக்கு 180 ஆண்டுகள் = 6 * 6 * 5

யாக்கோபு 147 ஆண்டுகள் = 7 * 7 * 3

அது மட்டுமல்ல, 5+5+7 = 6+6+5 = 7+7+3 = 17!

யாக்கோபுக்கு உண்டான 12 குமாரர்களுள் அவருக்கு பிரியமானவர் யோசேப்பு. என்றாலும் 12 குமாரர்களும் இஸ்ரவேல் தேசத்தைக் கட்ட தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டார்கள். எனவே, யாக்கோபுக்கு பின்பு எந்த நபரையும் மேற்கண்டவாறு அவர்களது வயதால் ஆதியாகமம் முக்கியப‌டுத்த‌வில்லை. ஆனால் யோசேப்பின் மேல் யாக்கோபு கொண்ட பிரியத்தைக் காட்ட பைபிள் மேற்கண்ட 17 என்ற எண்ணைப் பயன்படுத்தியுள்ளது. யாக்கோபோடு யோசேப்பு சேர்ந்த வாழ்ந்த காலம் 17 ஆண்டுகள், அதன் பின்பு அவர் எகிப்துக்கு விற்கப்பட்டார். பல ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் சந்ததித்தனர். பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்ந்த காலம் 17 ஆண்டுகள்...! (17 ஆண்டுகள் + 17 ஆண்டுகள்)

இறுதியாக, யோசேப்பு 110 வயதுமிக்கவராய் எகிப்தில் இறந்தார் என ஆதியாகமத்தில் காணலாம் (ஆதியாகமம் 50:22,23). எகிப்தில் 110 வயது வாழ்ந்தவர்கள் ஒரு பூரண வாழ்வை வாழ்ந்தவர்களாக போற்றப்பட்டார்கள். இது முன்பே நாம் தெரிந்துகொண்ட செய்தி தான்.

முதலாவதாக ஆதியாகமம் 5, ஆதியாகமம் 11 ஆகிய ஆதிகாரங்களில் கூறப்பட்டுள்ள வயது விவரங்கள் எப்படி சுமேரிய அரச குறிப்புகளோடு பொருந்துகிறது என கண்டோம். அதன் பின்பு ஆபிரகாம் வருகிறார், அவருக்கு பின்பு எப்படி பைபிள் வயதைப் பயன்படுத்தியுள்ளது என கண்டிருப்பீர்கள்.

இதைத் தவிர இரண்டு பேர்கள் தான் மிஞ்சியுள்ளனர், அவர்கள் சாராள் (127 ஆண்டுகள்), இஸ்மவேல் (137 ஆண்டுகள்). ஆதியாகமத்தில் வயது சொல்லப்பட்ட ஒரே பெண் சாராள் மட்டும் தான், இஸ்மவேலைத் தவிர, இஸ்ரவேல் வம்சத்தில் இருந்து விலகிய எவருக்கும் வயது சொல்லப்பட்டவில்லை. ஆண்மகனான‌ இஸ்மவேலுக்கு 137 ஆண்டுகளும், பெண்ணான சாராளுக்கு 127 ஆண்டுகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

முடிவரை:
மெத்தூசலா எப்படி 969 வாழ்ந்தார் என்ற கேள்வி ஒரு வரி தான். ஆனால் அதற்கான பதிலைப் பாருங்கள். பைபிள் என்பது எளிதாக வாசித்துக் கொண்டு போக செய்தித்தாள் அல்ல, யாரோ ஏதோ ஒரு காலத்தில் எழுதிவைத்த கதைப் புத்தகம் அல்ல... அது சரித்திரத்தில் விளங்கிய நம்பிக்கைகளையும் சம்பவங்களையும் தொகுத்து எழுதப்பட்ட ஒரு உன்னத நூல். ஆதியாகமத்தைப் படிக்கும் போது நீங்கள் தற்போதுள்ள உலகத்தில் இருந்தால் அதன் ஆழம், எழுத்துநடை, பொருள், உண்மை என எதுவுமே உங்களுக்கு புரியாது, அதன் உண்மையை அறிய நாம் பண்டைய மெசப்பொத்தோமியாவிற்கும் எகிப்து நாகரீகத்திற்கும் செல்ல வேண்டும், அக்காலத்தில் மெசப்பொத்தோமியாவிலும் எகிப்திலும் விளங்கி வந்த கணிதமுறை, நாள்காட்டி, பாரம்பரியங்கள், எண்கள் என அனைத்தையும் அறிந்து கொண்டு அதன் படி நாம் அச்செய்திகளைப் படித்தால் அப்பொழுது அதிலுள்ள உண்மைகள் நம் கண்களுக்கு புலப்படும். ஆதியாகமம் மெசப்பொத்தோமியாவில் வாழ்ந்த முற்பிதாக்களை மட்டும் நமக்குச் சொல்லவில்லை, அக்கால மெசப்பொத்தோமியர்களின் இலக்கிய நடையிலேயே அதனைச் சொல்கிறது...

ஆதாரங்கள்:
[1] Homilies on the Psalms 21 - St. Jerome
[4] The Story of Numbers" by John McLeish
[5] Macey, Samuel L. (1989). The Dynamics of Progress: Time, Method, and Measure. Atlanta, Georgia: University of Georgia Press. p. 92. ISBN 978-0-8203-3796-8.
[6] Hoffmeier, James Karl. The Archaeology of the Bible. Oxford: Lion, 2008. 48.
[7] Stephanie Dalley (ed.). Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others. Oxford University Press. ISBN 978-0-19-953836-2.
[8] Van De Mieroop, Marc (2004). A History of the Ancient Near East. Blackwell. p. 41. ISBN 0-631-22552-8.
[9] I. Tzvi Abusch, K. van der Toorn. Mesopotamian magic: textual, historical, and interpretative perspectives. p24.
[10] Catalogue of Enmebaragesi-era texts on CDLI wiki
[11] Friberg, “Numbers and Measures in the Earliest Written Records,” p.110
[12] C. Hyers, “The Narrative Form of Genesis 1: Cosmogenic, Yes; Scientific, No,” Journal of the American Scientific Affiliation 36, no. 4 (1984): 212.

Sunday, May 4, 2014

மரபியல் பார்வையில் ஆதாம், ஏவாள், நோவா...!

உலக மக்கள் அனைவரும் வெறும் இரண்டே பேரில் இருந்து தான் வந்தனர் என சொன்னால் அதைக் கேட்க நம்மில் பலருக்கு வியப்பாகத் தான் இருக்கும்! ஆனால் பைபிள் அவ்வாறு தான் சொல்கிறது, உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தம்பதியரில் இருந்தே தோன்றினர், அவர்கள் தான் ஆதாமும், ஏவாளும். பின்பு ஜலப்பிரளயத்தினால் மக்கள் மரித்துவிட, நோவாவின் சந்ததி வழியாக பூமியில் ஜனங்கள் பலுகி பெருகினார்கள் என்கிறது பைபிள்.

இன்று உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் தந்தை இருந்தனர் என சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? நம் நிறத்திற்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லாத வெள்ளையர்களையும், ஆப்ரிக்கர்களையும், சீனர்களையும் நம் சகோதரர்கள், தூரத்து உறவினர்கள் என கூறினால் நம்மால் எப்படி நம்ப முடியும்? ஏனெனில் இன்று நம் கண்களுக்குத் தேவை ஆதாரங்கள், நம் நம்பிக்கையைப் பெற அறிவியலில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் சான்றுகள் கிடைத்தே தீர வேண்டும்.

இனி தான் உண்மையான வியப்பு உங்களுக்கு காத்திருக்கிறது... நம் அனைவருக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் தான் இருந்தாள் என்கிறது அறிவியல். வெள்ளையரோ, ஆப்ரிக்கரோ, இந்தியரோ, சீனரோ யாராய் இருந்தாலும் சரி, இன்றுள்ள அத்தனை பேருக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் இருந்தாள் என நம் மரபணுக்கள் கூறுகின்றன. அது மட்டுமல்ல, ஆண் மக்கள் அனைவருக்கும் ஒரு காலத்தில் ஒரே தந்தை தான் இருந்தார் என அதே மரபணுக்கள் கூறி வருகின்றன. மரபியல் கூறும் அந்த தாய் தந்தயரைக் குறித்து இனி காணலாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு மரபணு பகுதிகள் "மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ" மற்றும் "Y குரோமோசோம்" என்பனவாகும். இது நுணுக்கமான அறிவியல் செய்திகளைக் கொண்ட கட்டுரை, எனவே கவனமாகப் படிக்கவும்.

Y குரோமோசோம்:
குரோமோசோம் என்பது மரபணுக்களை உள்ளடக்கிய ஒரு சிறுபகுதி. பெற்றோரில் இருந்து பிள்ளைகளுக்கு மரபுத்தகவல்களைக் கடத்த இந்த குரோமோசோம்கள் உதவுகின்றன. மனிதர்களாகிய நமக்கு மொத்தம் 46 குரோமோசோம்கள் உள்ளன. அதில் 23 தாயில் இருந்து பெற்றவை ஆகும், 23 தந்தையில் இருந்து பெற்றவை ஆகும். தந்தையின் 23 குரோமோசோம்களை தாயின் இனப்பெருக்க பகுதிக்கு எடுத்துச் செல்வது விந்தணுக்கள். அது போல தாயின் 23 குரோமோசோம்கள் சூழ்முட்டையில் அடங்கியிருக்கும்.

X குரோமோசோம் மற்றும் Y குரோமோசோம்

ஒரு குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது தாயல்ல, தந்தையின் வித்தே குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. தாயின் சூழ்முட்டையில் இருக்கும் முதல் 22 குரோமோசோம்களும் தந்தையின் விந்தணுவில் இருக்கின்ற முதல் 22 குரோமோசோம்களும் அமைப்பில் ஒத்தவை. ஆனால் சூழ்முட்டையில் உள்ள 23ஆவது குரோமோசோம் X வடிவில் இருக்கும். தந்தையின் விந்தணுவில் உள்ள 23ஆவது குரோமோசோம் X வடிவில் இருக்கலாம் அல்லது Y வடிவில் இருக்கலாம்.

பெண்ணின் சூழ்முட்டையை நோக்கிச்
செல்லும் ஆணின் விந்தணுக்கள்

தந்தை குழந்தைக்காக அளிக்கும் 23 குரோமோசோம்களில் 23ஆவது "X குரோமோசோம்" ஆக இருப்பின் குழந்தை பெண்ணாக பிறக்கும், அல்லது 23ஆவது குரோமோசோம் "Y குரோமோசோம்" ஆக இருப்பின் குழந்தை ஆணாக பிறக்கும். கணவன் மனைவியை அறியும் போது ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் சூழ்முட்டையை நோக்கி நீந்திச் செல்கின்றன. அதில் சில விந்தணுக்கள் X குரோமோசோமைக் கொண்டிருக்கும், சில விந்தணுக்கள் Y குரோமோசோமைக் கொண்டிருக்கும். முதலாவ‌தாக சூழ்முட்டையோடு எந்த விந்தணு இணைகிறதோ அதுவே குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கிறது. சூழ்முட்டையோடு முதல் விந்தணு இணைந்த பிறகு பிற விந்தணுக்கள் சூழ்முட்டையை அணுக முடியாது. சூழ்முட்டையும் விந்தணுவும் சேர்ந்து மனிதர்க்கு தேவையான 46 குரோமோசோம்களையும் பெற்றுவிட்டதால் கரு உருவாகி குழந்தை கருப்பையில் வளரத் தொடங்குகிறது. இதுவே ஒவ்வொருவர் பிறப்பிற்கும் முன்பு நிகழ்கின்ற சம்பவங்கள்.

இப்போது "Y குரோமோசோம்" என்றால் என்ன உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த "Y குரோமோசோம்" தான் இன்று உலகில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தந்தை இருந்திருக்கிறார் என கண்டுபிடிக்க உதவியிருக்கிறது. "Y குரோமோசோம்" தந்தையில் இருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படுவதால் இன்றுள்ள பெண்களுக்கும் ஒரே தந்தை தான் ஒரு காலத்தில் இருந்தாரா என்று கண்டுபிடிக்க இந்த குரோமோசோம் உதவவில்லை. இருந்தாலும் இன்று உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு ஆணின் வாரிசுகள் என்று தெரிந்திருப்பது ஆச்சரியமே.

இந்த கண்டுபிடிப்பிற்கு Y குரோமோசோம் எப்படி உதவியது என காண்போம். மரபணுக்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நபரின் நெருங்கிய உறவினர் யார் என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒரு நபரின் மரபணுக்கள் அந்நிய மனிதனோடு ஒத்துப் போவதை விட அவரின் உறவினரோடு நன்றாக ஒத்துப் போகும். அதனால் மூவரின் மரபணுக்களின் ஒற்றுமையை வைத்து அவர்களில் எந்த இரண்டு பேர் மிக நெருங்கிய உறவுக்கார் என்பதை எளிதாக அறிந்து விட முடியும்.

Y குரோமோசோம் மட்டுமே தந்தை தன் (ஆண்) குழந்தைக்கு அளிக்கும் 23 குரோமோசோம்களில் அடிக்கடி மரபணுமாற்றம் அடையாமல் ஒவ்வொரு சந்ததியிலும் காக்கப்படுகிறது, ஏனெனில் தந்தையின் மற்ற 22 குரோமோசோம்களின் அமைப்பை ஒத்த‌ குரோமோசோம்களை தாயும் கொண்டிருக்கிறாள். அதனால் தந்தை அளிக்கின்ற முதல் 22 குரோமோசோம்களின் அமைப்பு ஒவ்வொரு சந்ததியிலும் தாயின் குரோமோசோம்களால் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு Y குரோமோசோம் இல்லாதலால், ஆண் குழந்தையை அவள் சுமக்கும் போது தந்தையிடம் இருந்து பெறப்பட்ட Y குரோமோசோமின் அமைப்பு தாயின் 23ஆவது குரோமோசோமால் பெரிதாக பாதிக்கப்படாமல் காக்கப்படுகிறது. இவ்வாறு Y குரோமோசோம் பல சந்ததிகளுக்கு பாதிப்படையாமல் காக்கப்படுவதால் பெரிய அளவிலான (ஆண்களுக்கான) மரபணு சோதனைகளுக்கு இதனை பயன்படுத்துகின்றனர்.

எனவே பல தேசத்து ஆண்களை அழைத்து அவர்களிடம் உள்ள Y குரோமோசோமின் ஒற்றுமைக்கான‌ மரபணு சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரிலும் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் எந்த இரண்டு பேர் என முதலில் தீர்மானிக்கப்பட்டது, பின்பு அவர்களோடு நெருங்கிய அடுத்த உறவுக்காரர் யார் என கண்டுபிடிக்கப்பட்டது, இப்படியே அடுத்த உறவினர் யார் அதற்கடுத்த உறவினர் யார் என பின் செல்ல செல்ல அவர்கள் அனைவரும் இறுதியாக ஒருவரோடு ஒருவராக‌ முடிவு பெற்றுவிட்டனர். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே தந்தையில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும், ஒரே ஆணின் வாரிசுகளே இன்று உலகில் உள்ள அத்தனை ஆண்களும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எளிதாக புரிந்து கொள்ள கீழுள்ள படத்தைக் காணவும். அதில் இறுதியாக "Adamo Y-DNA" என முடிவு பெறும் நபரே இன்றுள்ள அத்தனை ஆண்களின் தந்தையாம்! அவருக்கு பெயர் "Y குரோமோசோமல் ஆதாம்" என சூட்டப்பட்டுள்ளது. இது பைபிளிற்கு கிடைத்த ஒரு புகழாரம்.


அடுத்து மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ குறித்து காணலாம்.

மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ
இங்கு குரோமோசோம்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனெனில் குழந்தை தன் தாயிடமிருந்து பெறுகின்ற குரோமோசோம்கள் எல்லாம் தந்தையின் குரோமோசோம்களோடு இணைந்து ஒவ்வொரு சந்ததியிலும் தன் அமைப்பில் சிதைந்து விடுகின்றன‌ என கண்டோம். குழந்தை ஆணாக இருந்தால் மட்டும் தாயின் 23ஆவது X குரோமோசோம் பெரிய அளவில் சிதையாமல் இருக்கிறது, ஏனெனில் தந்தை அளித்த Y குரோமோசோம் அதன் அமைப்பை அவ்வளவாக மாற்ற இயலவில்லை.

ஆனால் குழந்தை பெண்ணாக இருந்தால் தந்தை அளிக்கும் 23ஆவது குரோமோசோம் X ஆகும், எனவே தாயின் 23ஆம் X குரோமோசோம் அமைப்பில் பாதிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆணிடம் இருந்து பெறப்படும் Y குரோமோசோம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் பல சந்ததிகளுக்கு காக்கப்படுவது போல பெண்ணிடம் இருந்து பெறப்படும் எந்த குரோமோசோமும் காக்கப்படுவதில்லை. இன்றுள்ள உலக மக்கள் அனைவரையும் பெற்ற அன்றைய தாய் தன் குழந்தைகளுக்கு அளித்த அத்தனை குரோமோசோம்களும்  அமைப்பில் சிதைந்துவிட்டன. அதனால் நம் எல்லாரையும் பெற்ற தாயை மரபணு சோதனை வாயிலாக காண குரோமோசோம்களால் எந்த பயனும் இல்லை.

அதற்கு பதிலாக கைக்கொடுத்த இன்னொரு மரபணு தான் "மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ" ஆகும். மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ என்பது குரோமோசோம்களில் அடங்காத புற மரபணு ஆகும். மனித உடல் பல செல்களால் (உயிரணுக்களால்) ஆனது. நம் உடலில் உள்ள உயிரணுக்களில் இருந்து இப்போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரண்டு பகுதிகள் "நியூக்கிலியஸ் (உயிரணுக்கரு)" மற்றும் "மைட்டோகாண்டிரியா (இழைமணி)" என்பன. நியூக்கிலியஸில் (Nucleus) தான் நாம் நம் தாய் தந்தையரில் இருந்து பெற்ற 46 குரோமோசோம்களும் அடங்கியுள்ளன. மைட்டோகாண்டிரியா (Mitochondria) என்பது நியூக்கிலியஸில் இருந்து சற்று விலகி அமைந்துள்ள ஒரு உயிரணுப்பகுதி. இந்த மைட்டோகாண்டிரியாவிற்குள்ளும் சில மரபணுக்கள் உள்ளன, அதை தான் "மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ" என்கிறோம்.


மைட்டோகாண்டிரியா டி.என்.ஏ தாயில் இருந்து மட்டுமே ஒவ்வொரு குழந்தைக்கும் கடத்தப்படுகிறது. அது ஆண் குழந்தையானாலும் சரி, பெண் குழந்தையானாலும் சரி. உதாரணாத்திற்கு ஒரு தாய் தன் மகனுக்கு தன் மைட்டோகாண்டிரியா டி.என்.ஏவை அளிக்கிறார் என வைத்துக் கொள்வோம், அவன் வளர்ந்து பெரியவனாகி ஒரு குழந்தை பெறுகிறான். அந்த குழந்தை கொண்டுள்ள மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ அந்த ஆணில் இருந்து வந்ததல்ல, மாறாக அவன் மனைவியில் இருந்து அக்குழந்தைக்கு கடத்தப்பட்டது. எனவே, நம் அனைவருக்கும் உள்ள மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ காலங்காலமாக பெண்களிடம் இருந்து மட்டுமே வந்தவை ஆகும். அண்மையில் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தந்தை வழியாகவும் வரலாம் என கருத்துகள் வெளியாகி, மீண்டும் அது பெரும்பாலான அறிவியல் அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதற்கான சாத்தியங்கள் இருந்தாலும் அது மிக மிக அரிதான சாத்தியம். தந்தையின் விந்தணு தாயின் சூழ்முட்டையோடு சேரும் போது தந்தையில் இருந்து வருகின்ற மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ வேதிவினைகளால் அழிந்து விடுகிறது. எதாவது கோடியில் ஒருவருக்கு தந்தையின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தப்பி பிழைத்து கருவிற்குள் கடந்துவிடும். எனவே, மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தாய்வழியாகவே 99.999% பெறப்படுகிறது என உயிரியல் ஆய்வாளர்கள் ஏற்றுள்ளனர்.

மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ பெண்களிடம் இருந்து மட்டுமே காலங்காலமாக பெறப்படுவதால் அதனை வைத்து உலக மக்களின் தாயைக் காண்பது எளிது. உலகில் உள்ள ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும் வெவ்வேறு தாய் இருந்தால் மக்களின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ அமைப்பில் ஒத்துப்போகாது. ஆனால் உலகின் பல்வேறு தேசங்களில் வாழும் அத்தனை மக்களுக்கும் ஒரே மாதிரியான மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ அமைந்திருப்பதைக் கண்டு மரபியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனால் உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் தான் இருந்தாள் என்பது உறுதியாகியுள்ளது. அப்பெண்ணிற்கு "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" என பெயரிட்டுள்ளனர்.

இதனை இணையத்தின் பல்வேறு என்சைக்லோபீடியாக்களில் குறித்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் இச்செய்தி தவறாக இடம்பெற்றுள்ளது, ஆங்கில கட்டுரையின் பொருள் அறியாமல் தமிழ் விக்கி கட்டுரையை மொழிப்பெயர்த்துள்ளனர். உதாரணத்திற்கு, மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ உலகில் தற்போதுள்ள பெண்களுக்கு மட்டுமே ஒரே தாய் இருந்தாள் என்று நிரூபித்து இருப்பதாகவும், ஆனால் ஆண்களுக்கு இன்னும் அவ்வாறு நிரூபிக்கப்படவில்லை என குறித்துள்ளனர் (4.5.14). இது தவறு. ஆண், பெண் என உலக மக்கள் எல்லாருக்கும் ஒரே தாய் இருந்திருக்கிறாள் என்றே மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ நிரூபித்து இருக்கிறது. ஒருவேளை தமிழ் விக்கி சொல்வது போல பெண்களுக்கு மட்டுமே ஒரே தாய் இருந்தாள் என்று எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் என காணலாம். பெண்கள் திருமணமாகி பெறும் ஆண் பெண் குழந்தைகளுக்கு எல்லாம் அவர்களது மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ மட்டுமே கடத்தப்படும். எனவே, தந்தையர் எல்லாம் இறந்து அடுத்த சந்ததி வரும் போது, புது ஆண்கள் எல்லாம் பெண்களிடம் உள்ள அதே மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏவைத் தான் கொண்டிருப்பார்கள். எனவே, மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ உலகில் உள்ள ஆண், பெண் என அத்தனை மக்களுக்கும் இருந்த பொதுவான தாயையே உறுதி செய்திருக்கிறது என்பதில் சந்தேகம் தேவையில்லை, தமிழ் விக்கியைத் தவிர பிற அனைத்து என்சைக்லோப்பீடியாக்களிலும் இச்செய்தி சரியாக இடம்பெற்றுள்ளது.

"Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" வாழ்ந்த காலம் பற்றி: Y குரோமோசோமல் ஆதாம் மற்றும் மைட்டோகாண்டிரியல் ஏவாள் வாழ்ந்த காலம் குறித்து அறிவியல் ஆய்வாளர்களுக்கு உள்ளாகவே பெரும் கருத்து மோதல்கள் உள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தை அருகில் கொண்டு வர வர அது பரிணாம கொள்கைகளுக்கு பெரும் இடையூறலாக அமைகிறது, எனவே மைட்டோகாண்டிரியல் ஏவாள் 8000 தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்தவள் என தீர்மானித்துள்ளனர். அதன் படி, அப்பெண் கிட்டத்தட்ட 99000 முதல் 200000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள் என ஏற்கப்படுகிறது. இதனை நிச்சயாமாக கூற முடியாது, தற்போது ஏற்றுள்ள நிலவரப்படி இக்காலம் முன்வைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். இக்கணிப்பிற்குப் பின் பரிணாமக் கொள்கைக்கு சாதகமான அறிவியல் சாத்தியங்களும் உள்ளன, இடையூறான யூகங்களும் உள்ளன. எனவே சரியான காலத்தைக் கணிப்பது தற்சமயம் ஆய்வின் நிலையிலேயே உள்ளது.

Y குரோமோசோமல் ஆதாமை பொறுத்த வரை அவரை மைட்டோகாண்டிரியல் ஏவாள் வாழ்ந்த காலத்தோடு பொறுத்த எந்த ஆய்வாளர்களும் 2012 வரை முன்வரவில்லை. முதலில் அவர் மைட்டோகாண்டிரியல் ஏவாளை விட பல்லாயிர ஆண்டுகள் மூத்தவர் என்றனர், பின்பு அப்பெண்ணை விட பல்லாயிர ஆண்டுகள் இளையவர் என்றனர். தற்போது இவரும் மைட்டோகாண்டிரியல் ஏவாள் வாழ்ந்த அதே கால கட்டத்தில் தான் வாழ்ந்திருக்கிறார் என அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை குறித்து கருத்து வேறுபாடுகளும் உள்ளன. (Source)

இருவரது காலத்தையும் கணிக்க அறிவியல் அறிஞர்கள் திண்டாடுவதற்கு முதல் காரணம் பரிணாமக் கொள்கைகளோடு அவர்களின் காலத்தைப் பொறுத்தவே. ஏனெனில் இதனைச் சுட்டிக் காட்டி மேற்கத்திய நாடுகளில் உள்ள இறைநம்பிக்கையாளர்களும், பரிணாமக் கொள்கையில் நம்பிக்கையில்லாத அறிவியல் ஆய்வாளர்களும் பரிணாமவியலைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, மேற்கத்திய பரிணாம வட்டத்திற்குள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன, கருத்து வேறுபாடு கொண்ட தலைப்புகளாக‌ "Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" உள்ளனர்.

இனி, முக்கியமான தகவல்களைக் காணலாம்.

இங்கு சொல்லப்பட்ட செய்திகளுக்கு மறுப்பு சொல்ல விரும்பும் நபர் இப்படி எழுத முனைவார்,

"இந்த பதிவை எழுதிய நபருக்கு கொஞ்சம் கூட அறிவியல் ஞானமே இல்லை. தன் நம்பிக்கைகளுக்கு ஆதாரங்காட்ட இவ்வாறு அறிவியல் கண்டுபிடிப்புகளைத் திரித்து எழுதுகிறார். "மைட்டோகாண்டிரியல் ஏவாள் தான் இன்றுள்ள அத்தனை மக்களின் தாய், Y குரோமோசோமல் ஆதாம் இன்றுள்ள அத்தனை ஆண்களின் தந்தை" என்றாலும் அவர்கள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை, அவர்கள் வாழ்ந்த சமயத்திலும் அதற்கு முன்பும் பல மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால் அவர்களது சந்ததி இன்றுவரை நீடித்து வரவில்லை, அதிர்ஷ்டவசமாக மைட்டோகாண்டிரியல் ஏவாள் மற்றும் Y குரோமோசோமல் ஆதாமின் சந்ததி மட்டும் இன்றுவரை நீடித்து அவர்களது வாரிசுகளாக மக்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள். அதோடு Y குரோமோசோமல் ஆதாமும் மைட்டோகாண்டிரியா ஏவாளும் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, இதையெல்லாம் மறைத்து விட்டு பைபிளிற்கு ஆதாரங்காட்ட இந்த நபர் பொய் சொல்லுகிறார்"

இந்த மறுப்புச் செய்திகள் எல்லாம் பைபிளிற்கு இன்னும் ஆதரவானவை...! எப்படி?

பைபிள்படி, உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள். அவர்கள் சந்ததி வழியாக‌ பல தலைமுறைகள் கழித்து பிறந்தவர் நோவா. அக்காலத்தில் பூமி பாவத்தால் நிறைந்திருந்ததால் தேவன் மனிதர்களை ஜலப்பிரளயத்தினால் அழித்தார். அதில் தப்பிப் பிழைத்தது நோவாவின் குடும்பம் மட்டுமே, அதாவது நோவா, அவரது மனைவி, அவரது மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள் என்ற எட்டு பேர் தான். இந்த எட்டு பேர்களால் மீண்டும் மனிதர்கள் பழுகிப் பெருகினர் என்கிறது பைபிள். அப்படியெனில், இன்றுள்ள நம் அனைவரும் நோவாவின் குடும்பத்தினர். அதில் உள்ள ஆண்கள் நோவாவும் அவரது மூன்று மகன்களும். ஆக, நோவாவின் "Y குரோமோசோம்" தான் அவரது மகன்களுக்கும் உள்ளது. எனவே, "Y குரோமோசோமல் ஆதாம்" நோவாவாக இருக்கலாம்.

இனி மைட்டோகாண்டிரியல் ஏவாளைக் குறித்துக் காணலாம். ஏவாளுக்குப் பல பெண் வாரிசுகள் உண்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏவாளுக்கு உண்டான அந்த பெண் வாரிசுகளுள் ஏதோ ஒரு பெண் வழி வந்தவர்கள் தான் தப்பி பிழைத்த நோவா குடும்பத்தினர் என வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்.


மேற்கண்ட படத்தின் படி, மெத்துசலாவின் மனைவியின் மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ தான் தப்பி பிழைத்த நோவா குடும்பத்தினர் எட்டு பேருக்கும் உள்ளது. இப்படத்தின் மூலம் கூற வருவது இதுதான், நோவாவின் பெண் குடும்பத்தினர் ஏவாளின் ஒரு பெண் வாரிசு வழியாக வந்தவர்களாக இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன‌, ஏனெனில் அக்காலத்தில் மக்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களையே மணமுடித்துக் கொண்டார்கள். எனவே, "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" நோவா குடும்பத்தினரைப் பெற்றெடுத்த ஏவாளின் ஒரு பெண் வாரிசாக இருக்கலாம்! (அந்த பெண் வாரிசு மெத்துசலாவின் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, மெத்துசலாவின் மனைவி விளக்கத்திற்காக மட்டுமே எடுத்துக்காட்டப்பட்டாள்).

இப்போது மேற்கண்ட மறுப்பைப் படிக்கவும்,

"மைட்டோகாண்டிரியல் ஏவாளும், Y குரோமோசோமல் ஆதாமும் உலகின் முதல் மனிதர்கள் அல்ல, அவர்களுக்கு முன்பும் மனிதர்கள் வாழ்ந்தனர், ஆனால் மற்ற மனிதர்களின் வாரிசுகள் நிலைக்கவில்லை, அதிர்ஷடவசமாக மைட்டோகாண்டிரியல் ஏவாளின், Y குரோமோசோமல் ஆதாமின் வாரிசுகள் மட்டும் நீடித்து வருகின்றனர், அதோடு அவ்விருவரும் கணவன் மனைவியாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை"

இப்பதிவின் மூலம் நாம் அறிய வருவது,

1) "Y குரோமோசோமல் ஆதாம்" நோவாவாகவும், "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" நோவா குடும்பத்தினரைப் பெற்றெடுத்த ஏவாளின் ஒரு பெண் வாரிசாகவும் இருக்கலாம். மரபியல் தருகின்ற செய்திகள் பைபிளோடு கச்சிதமாகப் பொருந்துகிறது.

2) அறிவியல் படி, இன்றுள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் இருந்திருக்கிறாள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3) அத்தனை ஆண் மக்களும் ஒரே ஆணின் வாரிசுகள் என்பது நிருபனம் ஆகி உள்ளது. (பெண்களுக்கு Y குரோமோசோம் இல்லாததால் பெண்களிடம் இந்த ஆய்வை நடத்த இயலவில்லை)

4) இன்று உலகில் 7 பில்லியன், அதாவது ஏழநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு காலத்தில் ஒரே தாய் இருந்திருக்கிறாள் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு சாதரணமானது அல்ல, அது வியப்பிற்குரியது.

5) அந்த 7 பில்லியன் மக்களில் பாதிக்கு மேல் ஆண் மக்கள், அவர்கள் அத்தனை பேரும் ஒரே ஆணின் வாரிசுகள் என்பதும் வியப்பிற்குரியது தான்.

உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு தாய் தந்தை இருந்தனர் என பைபிள் கூறுவதற்கு அறிவியல் சாத்தியங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல், பைபிளில் ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா, இஸ்ரவேலருக்கு தகப்பன் யாக்கோபு என ஒவ்வொரு பகுதியில் குடியிருந்த ஜனங்களுக்கும் ஒவ்வொரு நபரை பைபிள் தகப்பன் என்கிறது, எவ்வாறு ஒரு மனிதனின் வாரிசுகள் ஒரு பகுதியின் மக்களாக பெருக முடியும் என பல காலமாக பைபிளைக் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. அது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த கண்டுபிடிப்புகள் சாதமாக நிற்கின்றன. அறிவியல் பார்வையில் இதெல்லாம் அறிவுப்பூர்வமான செய்திகள் என்பதில் சந்தேகமில்லை. அந்த காலத்தில் உலக சிருஷ்டிப்பைக் குறித்து பல்வேறு சமயங்களில் செய்திகள் சொல்லப்பட்டன, அது போல பைபிளிலும் சொல்லப்பட்டுள்ளது. 

பைபிள் அல்லாத பிற பண்டைய வேத நூல் எதாவது ஒன்றை எடுத்து அதிலுள்ள உலக சிருஷ்டிப்பு குறித்த செய்தியை வாசித்தால் பைபிள் எவ்வளவு தூரம் தன் தரத்தில் உயர்ந்து நிற்கிறது என காணலாம். நிச்சயமாக அதில் உள்ள படைப்பின் செய்திகளுக்கு அறிவியல் வளர வளர சிறிது சிறிதாக ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன, முதலில் "Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" குறித்த கண்டுபிடிப்பு வெளியானதும் அது பல அறிவியல் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டது, இப்போது ஏற்கப்பட்டுள்ளது, தற்போது இருவரும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர், கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்த காலத்தை அருகில் கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர். நிச்சயமாக, பைபிள் அறிவியல் சாத்தியங்கள் மிக்க படைப்பின் செய்திகளைக் கூறுகிறது என்பதில் ஐயமில்லை. மரபியல் விரைவில் "Y குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்டிரியல் ஏவாள்" யார் என அடையாளம் காணும். விழித்திருப்போம்.
"மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம், நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?" - இயேசு (யோவான் 3:11,12)

Read here - Genetic Adam and Eve uncovered (FOX News)

Thursday, May 1, 2014

இறைநம்பிக்கை மூடநம்பிக்கையா?


இன்று பல இணையதளங்களில் தெய்வ நம்பிக்கை ஏளனமாக சித்தரிக்கப்படுகிறது. கடவுள் உண்டு என நம்புபவர்கள் அடிப்படை அறிவு இல்லாதவர்கள், சரித்திரம் தெரியாதவர்கள், அறிவியல் ஞானமே இல்லாத பழமைவாதிகள் என பல்வேறு ஏளனங்கள் சுற்றி சுற்றி வளம் வருவதைக் காணலாம். நான் ஒரு நாத்திகன் என சொல்லிக் கொள்வதும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை கேலி செய்வதும் ஒரு ஃபேஷனாக மாறி வருகிறது. இதனை நீங்களே அறிந்திருப்பீர்கள்.

மக்கள் கடவுள் நம்பிக்கையைப் புறக்கணிப்பது ஏன்?

1) இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்ள:
ஏனெனில் தெய்வ நம்பிக்கைகள் தீய செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றன. பொறாமை, பொய், கோபம், விபச்சாரம், ஓரினச் சேர்க்கை, இச்சை, கலியாட்டம், கூத்து என மனிதன் விரும்பும் பல செயல்களை இறைநம்பிக்கை வெறுக்கிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் பரலோகத்தை சென்றடைவதில்லை, அவர்களுக்கு எரிகிற நரகமே அளிக்கப்படும் என மார்க்கங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல், வாழ்நாட்களிலேயே அத்தகைய தீய செயல்களில் ஈடுபடுவோரை சமுதாயத்தில் இழிவானவர்களாகக் காணச் செய்கிறது. "நான் விபச்சாரத்தில் ஈடுப்பட்டவன், கொலை செய்தவன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவன், திருட்டுத் தொழில் செய்தவன்" என யாராலும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. அப்படி ஒருவன் தன்னைக் குறித்துச் சொல்லும் போது அவன் அருவருக்கப்பட்டவனாக சமுதாயத்தில் காணப்படுகிறான். இதற்கு முதல் காரணம் இறைநம்பிக்கைகள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்களே. இச்சை, கொலை, களவு என பல செயல்களை அருவருப்பான செயல்களாக இறைநம்பிக்கை மாற்றிவிட்டது, தெய்வ நம்பிக்கை உள்ளவரை இந்த எண்ணங்கள் மக்கள் மனதை விட்டு போகாது, மனிதனால் அவன் விரும்பிய இச்சைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாது. தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் மனிதன் இறைநம்பிக்கையை வெறுக்கிறான், தன் இச்சைகளுக்குத் தடை விதிக்கும் இறைநம்பிக்கையை புறந்தள்ளுகிறான், தன் இச்சையான செயல்களை அருவருப்பாக்கி சமுதாயத்தில் தன்னை இழிவடுப்படுத்தும் இறைநம்பிக்கையை அடியோடு பிடுங்க முயற்சிக்கிறான். இது முதல் காரணம்.

2) மூட நம்பிக்கைகளை களையெடுக்க:
இறைநம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் பலவற்றிற்கும் வழி வகுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு நரபலி, தீண்டாமை, சாதிக் கொடுமை, வன்முறை, போலி ஆன்மீகவாதிகள் என பல தீமைகளுக்கும் நிச்சயமாக இறை ந‌ம்பிக்கைகள் வழி வகுத்திருக்கின்றன. உண்மைகளை ஆராய்ந்து உணராமல் கண்மூடித்தனமாக தங்கள் நம்பிக்கைகளை மக்கள் நம்பியதே இதன் காரணம். மக்களிடம் உள்ள அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை வஞ்சித்த‌ போலி ஆன்மீகவாதிகள் பலரை உலகம் முழுவதும் காணலாம். இதனால் சமுதாயத்தில் இருந்து இறைநம்பிக்கையை அடியோடு பிடுங்க எழுந்த சீர்த்திருத்த தலைவர்கள் ஏராளம். பெரியார் இதற்கு நல்ல உதாரணம்.

3) சோர்ந்து போனவர்கள்:
இறைநம்பிக்கையில் தளர்ந்து போனவர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறாமல் போனதை நினைத்து மனங்கசந்து இறைவனை புறந்தள்ளினர்வர்கள் இல்லாமல் இல்லை. தங்கள் வாழ்வில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களுக்கு இறைவனே காரணம், அவர் தங்களுக்கு உதவாததே அதற்கு காரணம் என நொந்து போனவர்கள் உண்டு. பரிணாமக் கொள்கையைக் கொண்டு வந்த சார்லஸ் டார்வின் இதற்குச் சான்றாய் நிற்கிறார். தன் அன்பு மகள் மரணப்படுக்கையில் விழுவதற்கு முன்பு வரை தேவாலயத்திற்குச் சென்றவர் அவர். தன் வேண்டுதலுக்கு பலன் இல்லாமல் தன் மகள் இறந்த‌ போது டார்வின் துவண்டு போனார். அதுமுதல் இறை நம்பிக்கையை கைவிட்டு நாத்திகத்தை ஏற்றுக் கொண்டார்.

4) தேடி தேடி அழுத்துப் போனவர்கள்:
இறைவனைத் தேடித் தேடி அழுத்து போனவர்கள் நாத்திகத்தை ஏற்கின்றனர். கடவுள் உண்டு என நிச்சயமாக நம்பி அவரைத் தேட முயன்று, வேதங்களை இரவும் பகலும் புறட்டிப் பார்த்து வரலாற்று ஆதாரங்களைத் தேடி இறுதியில் குழம்பிப் போகின்றனர். தங்கள் குழப்பத்தில் இருந்து விடுதலைக் கிடைக்க இறைநம்பிக்கையை கடைசியாக கைவிடுவார்கள். இத்தகைய மக்களை நீங்களே கண்டிருப்பீர்கள்.

5) கேலி கிண்டல்களுக்கு பயந்து:
நான் இறை நம்பிக்கை உள்ளவன் என சொன்னால் என் நாத்திக நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள், என்னை பழமைவாதி என கேலி செய்வார்கள், எனக்கு மரியாதை மதிப்பு கிடைக்காது என நினைத்து பயந்து நாத்திகத்தை ஏற்கும் வாலிபர்களைத் தினம் தினம் பார்க்கலாம்.

6) பரவி வரும் புது டிரண்டு:
இது மிகவும் வருத்தமான கேட்டகரி. அதாவது எப்படி போலி ஆன்மீகவாதிகளை நாம் காண்கிறோமோ, அதே போல போலி நாத்திகர்களும் உள்ளனர். போலி நாத்திகர் என்றால் இறை நம்பிக்கை கொண்டவர்கள், எதாவது ஒரு மார்க்கத்தைத் தங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருப்பார்கள், அது போல எதாவது ஒரு மார்க்கத்தின் மேல் அளவில்லாத கசப்பைக் கொண்டிருப்பார்கள். தங்கள் கசப்பைக் கொடித் தீர்க்க ஒரு வலைப்பூ ஆரம்பித்து, அந்த மார்க்கத்தைக் கட்டுக்கதை, பொய் என ஏளனமான பல சொற்களைச் சொல்லி ஏசுவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை என்ன என்று அந்த பக்கத்தில் எந்த தகவலும் இருக்காது. இது ஒருவிதத்தில் நல்ல வசதி தான்! ஏனென்றால் தன் நம்பிக்கை என்ன என்று தான் சொல்லும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் தன் நம்பிக்கையைக் குறித்து கேள்வி எழுப்புவார், அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலை வரும் என பயந்து தங்கள் நம்பிக்கை என்ன என்று கூறாமல் குறிப்பட்ட ஒரு மார்க்கத்தை மட்டும் இகழ்ந்து வருவார்கள். உங்கள் நம்பிக்கை என்ன என எவராவது கேட்கும் போது பதில் சொல்ல மாட்டார்கள், விடாமல் அவரிடம் கேட்க நேர்ந்தால் "நானொரு நாத்திகன்" என பதில் வரும். நாத்திகன் குறிப்பிட்ட ஒரு மார்க்கத்தை மட்டும் இகழ‌மாட்டான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் தான் போலி நாத்திகர்கள். இந்த புது டிரண்டு குறிப்பாக தமிழ் வலையில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது...!

சரி, இதற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்?
உண்டு, மேலே உள்ள அத்தனை காரணங்களுக்கும் அப்பாற்ப்பட்டது தான் இறை நம்பிக்கை. எப்படி?


இறைநம்பிக்கை என்பது என்ன?
இறை நம்பிக்கை என்பது கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம் என்ற மார்க்கங்கள் அல்ல‌. மார்க்கம் என்பது வேறு, இறைநம்பிக்கை என்பது வேறு. "இறைவன் உள்ளார்" என திட்டமாக நம்புவது தான் இறைநம்பிக்கை. எல்லாவற்றிலும் இறைவனே காரணம், கண்களால் காணப்படுபவை, காணப்படாதவை என எல்லாவற்றையும் படைத்தவர் உண்டு. நம் புத்திக்கு எட்டாத ஒரு சக்தி உள்ளது, அந்த சக்தி இயற்கைக்கு அப்பாற்பட்டது என நம்புவதே இறை நம்பிக்கை. மார்க்கம் என்பது அந்த இறைவனை அண்டிச் சேர நாம் என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொரு மக்களிடையே விளங்கி வரும் நம்பிக்கைகள். எனவே இறைநம்பிக்கையையும், மார்க்கத்தையும் ஒன்றாக நினைத்துக் குழம்ப வேண்டாம். இறைநம்பிக்கை என்பது முற்றிலும் வேறு.

ஏன் இறைநம்பிக்கையையும் மார்க்கத்தையும் பிரித்துப் பார்க்கிறோம்?
மேலே உள்ள அத்தனை காரணங்களும் மார்க்கத்தோடு மட்டுமே தொடர்புடையவை. இறைவனை மறுக்க மக்கள் கூறும் காரணங்கள் எல்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவையே, மார்க்கங்களின் மேல் வெறுப்புக் கொண்டே இறைவனையே நாத்திக மக்கள் புரந்தள்ளுகிறார்கள். ஒரு நாத்திகரோடு விவாதம் நடக்கும் போது, இத்தகைய கேள்விகள் எழும்பும், "கடவுள் உண்டு என்றால் அந்த கடவுளை எனக்குக் காட்டு, ஒரு அற்புதம் செய்து காட்டு, உன் வேத நூலில் உள்ள இந்த கதை பொய், அதற்கு ஆதாரமில்லை, இந்த வசனம் மக்களுக்குள் தீண்டாமையை ஊக்குவிக்கிறது" என பல கேள்விகளை எழுப்புவார். இந்த கேள்விகள் எல்லாம் மார்க்கத்தைச் சார்ந்தவையே. அக்கேள்விகளுக்கும் இறை நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் இறை நம்பிக்கையை இதுவரை யாராலும் மறுக்க முடியவில்லை.

எதனால் இறை நம்பிக்கையை மறுக்க முடியவில்லை?
ஒரு நாத்திகரோடு இறைவனைக் குறித்து வாதாடும் போது, இவ்வாறு நிகழ்வதைக் காணலாம்,

நீங்கள்: இறைவன் இல்லை என்றால் இந்த பூமி, ஆகாயம், சூரியன், கோள்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன? எப்படி எல்லா பொருள்களும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது? நம் உடல் முதற்கொண்டு எல்லா காரியங்களும் ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டது போல தெரிகிறதே!

நாத்திகர்: முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த வெப்பக் குவியல் ஒன்று வெடித்துச் சிதறியது, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தன. அவ்வாறு பூமி சரியான இடத்தில் விழுந்து சரியான தட்ப வெப்ப நிலைகளைப் பெற்றது. அதனால் அதில் உயிர் உண்டாக வாய்ப்பு பிறந்தது. அப்போது பூமியில் இருந்த நீரில் ரசாயன மாற்றங்கள் நடந்தது, தானாக நுண்ணுயிரி வந்தது, அந்து நுண்ணுயிரி கொஞ்சம் பெரிதானது, இன்னும் கொஞ்சம் பெரிதானது, அப்படியே புழுவானது, புழு காலப்போக்கில் மீனானது, மீன் தவளையாகி, தவளை முதலையாகி, முதலை பறவையாகி, பறவை குரங்காகி, குரங்கு மனிதானது.... இதுதான் அறிவியல் உண்மை.

நீங்கள்: சரி அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீங்கள் கூறிய முதல் வெப்பக் குவியல் எங்கிருந்து வந்தது?

நாத்திகர்: வானத்தில் இருந்த துகள்கள் எல்லாம் ஒன்றினைந்தே அந்த குவியல் வந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள்: இந்த செய்தியும் "இருக்கலாம்" என்ற யூக கோட்பாடு தான். அந்த வானம், அதிலிருந்த துகள்கள் எல்லாம் எப்படி வந்தன?

நாத்திகர்: இதற்கு அறிவியல் விரைவில் பதில் சொல்லும்.

நீங்கள்: எத்தனை தூரம் பின் சென்றாலும் அவைகளுக்குப் பின் ஒரு சக்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த படைப்பாற்றல் தான் இறைவன். முதலும் முடிவுமற்ற சக்தி, "எல்லா பொருளுக்கும் முதல் உண்டு முடிவு உண்டு" என்ற இயற்கை விதிக்கு அப்பாற்ப்பட்ட சக்தி தான் அந்த இறைவன்.

நாத்திகர்: அப்படியென்றால் அந்த கடவுளை எனக்குக் காட்டு, ஒரு அற்புதம் செய்து காட்டு, உன் வேத நூலில் உள்ள இந்த கதை பொய், அதற்கு ஆதாரமில்லை, இந்த வசனம் மக்களுக்குள் தீண்டாமையை ஊக்குவிக்கிறது... இன்னும் சொல்லட்டுமா?

மீண்டும் அந்த நாத்திகர் இறை நம்பிக்கையை விட்டு மார்க்கத்தின் பக்கம் தன் வாதத்தை திசை திருப்புவதைப் பார்க்கலாம். இதன் காரணமாகவே இறை நம்பிக்கை இன்றும் மறுக்கப்பட முடியாமல் உள்ளது. இனி வாதம் எவ்வாறு தொடர்கிறது என காணலாம்,

நீங்கள்: நண்பா, உடனே மார்க்க நம்பிக்கைகள் பக்கம் திசை திரும்பிவிட்டாயே, எல்லாவற்றிற்கும் மிஞ்சிய முதலும் முடிவும் அற்ற ஒரு ஆற்றல் உண்டு என்பதை எப்படி மறுக்கப் போகிறாய்? மார்க்கத்தின் பக்கம் திசை திரும்பாமல் இறை நம்பிக்கைக்கு முதலில் பதில் சொல்...

நாத்திகர்: ...........???? அந்த கடவுளைப் படைத்தவர் யார்?

நீங்கள்: உனக்கு விளங்கவில்லையா? "எல்லா பொருளுக்கும் முதல் உண்டு முடிவு உண்டு" என்ற இயற்கை விதிக்கு அப்பாற்ப்பட்ட சக்தி தான் இறைவன் என சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடவுள் என்கிற சக்தி உண்டு, இயற்கை விதியை அது மீறுவதால் அது இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்தி. நீ இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை என்பவன், எனவே அத்தகைய சக்தி இல்லாமல் எப்படி எல்லாமே வந்தது என சொல்ல வேண்டியது உன் கடமை. அதை ஏன் உன்னால் செய்ய முடியவில்லை???

நாத்திகர்: ?????????????????????????????........?

(வாதம் முடிந்தது...)

உண்மையான‌ அறிவு இறைவன் உள்ளார், நமக்கு பின்னால் நம்மை படைத்த ஏதோ ஒரு சக்தி உள்ளது என நம்புவதே. "இறைவன் உள்ளார்" என கூற நீங்கள் வெட்கப்படவே தேவையில்லை. இறைவன் உள்ளார் என்பதை லாஜிக்கோடு சிந்திப்பவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். இங்கு இறைவன் என நாம் கூறுவது நம் சிந்தனைக்கு புலப்படாத ஒரு சக்தி, அத்தனை காரியங்களையும் படைத்த ஒரு ஆற்றல். நிச்சயமாக அத்தகைய சக்தி ஒன்று இருந்தாகவே வேண்டும்.

இப்பதிவின் மூலம் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது இதுதான், இறை நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை இல்லை, அது உண்மையான அறிவு, அதனைக் குறித்து இதுவரை எவராலும் மறுப்புச் சொல்ல முடியவில்லை. மறுப்புச் சொல்வதாக கூறுபவர்கள் மார்க்கத்தைக் குறித்துத் தான் கேள்வி எழுப்புவார்கள், இறைநம்பிக்கைக்கும் மார்க்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்து அவர்களிடம் தெளிவில்லை என்பதை மேலே காணலாம்.

எனவே, நாத்திகர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமோ, காரணமோ ஒன்றுமே இல்லை. நீங்கள் அவரிடம் பேசும் போது அவரது வார்த்தைகள் எல்லாம் உங்கள் மார்க்கத்தைக் குறித்து கேள்வி எழுப்புவதாகவே இருக்கும், மாறாக இறைநம்பிக்கைக்கும் படைப்பாற்றலுக்கும் அவர் எவ்வித மறுப்பும் சொல்ல முடியாதவராகவே இருப்பார். இது உலகறிந்த உண்மை. ஆக, எந்த நாத்திகரிடம் பேச ஆரம்பித்தாலும், முதலில் இறை நம்பிக்கைக்குப் பதில் சொல்ல சொல்லுங்கள்... அதை அவர் விளக்க முடியாத பட்சத்தில் ஏன் அவர் கூற்றை அறிவுப்பூர்வமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கேளுங்கள்...! அந்த நண்பர் நமக்கும் மிஞ்சிய ஆற்றல் ஒன்று உண்டு என்பதை நிச்சயமாக அறிந்துக் கொள்வார்.

அடுத்து, மார்க்கம் பற்றி:
இறை நம்பிக்கை அறிவுப்பூர்வமானது, இயற்கைக்கு மிஞ்சிய சக்தி உள்ளது என்பதை மனப்பூர்வமாக நம்பலாம். 

ஆனால் அந்த சக்தி என்ன? அது உணர்வில்லாத எதாவது ஒரு ஆற்றலா? அல்லது நம்மைப் போல அன்பு, பாசம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுள்ள ஒரு நபரா? உணர்வுள்ள நபர் என்றால் அவர் யார்? அவர் நல்லவரா கெட்டவரா? அவர் எதற்காக நம்மைப் படைத்தார், பிறப்பு இறப்பு என்றால் என்ன? பிறப்புக்கு முன்பு நாம் எங்கிருந்தோம், இறந்த பின் எங்கே போவோம்? உயிர் என எதாவது உள்ளதா? வாழ்க்கையின் பொருள் என்ன?

இது போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிப்பது தான் மார்க்கம். 

கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம், யூதம், சமணம், புத்தம்... என ஒவ்வொரு மார்க்கங்களும் ஒவ்வொரு விளக்கத்தைத் தருகின்றன. மேலே மார்க்கங்களைக் குறித்து நாத்திக மக்கள் முன்வைக்கும் ஆறு குற்றச்சாட்டுகளைக் கண்டோம். அவை ஒரு பொருட்டே அல்ல, ஏனெனில் மார்க்க நம்பிக்கைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. நிம்மதி, சந்தோஷம், அன்பு, பாசம், ஒற்றுமை, விசுவாசம், இச்சையடக்கம், சமாதானம் போன்ற பல நல்ல விஷயங்களை மார்க்கம் நமக்குக் கற்றுத் தராமல் இல்லை, மக்கள் மத்தியில் நிலவி வருகின்ற இச்சைகளை களையெடுக்க ஆன்மீகம் உதவாமல் இல்லை. காலையில் எழுந்து கடவுளைத் தொழுது இன்னிசைப் பாடல்கள் பாடி இனிமையாகத் தங்கள் வாழ்வை தொடங்குபவர்கள் உள்ளார்கள், நிம்மதியாக அந்த நாளை முடித்து, இரவில் ஜெபம் செய்துவிட்டு உறங்கச் செல்வோர் உள்ளார்கள். எனவே, உண்மையைத் தெளிவாக அறிந்துக் கொண்டு, நமக்கு வழிக்காட்டியவரை நேர்மையாகப் பின்பற்றினாலே தீண்டாமை, சாதிக் கொடுமை, அழுப்பு, சோர்வு, மூட நம்பிக்கைகள் போன்ற மேற்கண்ட பிரட்சனைகள் எல்லாம் விலகிப் போகும். நன்மையோ தீமையோ நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் உள்ளது. நம்மீது உள்ள பிழையை பிறர் மேல் சுமத்துவது தவறு.

மார்க்கங்களுள் நமக்குப் பிடித்ததை நாம் தேர்ந்தெடுப்பது நம் உரிமை, அந்த வகையில் இங்கு இயேசு கிறிஸ்து இறைவனுக்கும் வாழ்க்கைக்கும் கூறிய விளக்கத்தை இந்த வலைப்பூவில் அறிந்து கொள்ளலாம்.

ஒரு வேண்டுகோள், இது இயற்கைக்கு மிஞ்சிய ஒரு படைப்பாற்றல் உண்டு என நம்புபவர்களுக்கும், அந்த சக்தியை அறிந்த கொள்ள விரும்புபவர்களுக்கும் எழுதப்பட்ட வலைப்பூ, எனவே நாத்திகர் என கூறிக் கொண்டு வாதிட வருபவர்கள் முதலில் உலகத் தோற்றத்திற்கு விடையளிக்கவும், அதற்கு விளக்கம் அளிக்காமல் "நாத்திகர் என்ற பெயரில்" வாதம் செய்ய முனைவது அர்த்தமற்றது. அடுத்ததாக, இறைநம்பிக்கை உள்ளவர்கள் இறைவனைக் கிட்டிச் சேர்வதைக் குறித்த உங்கள் மார்க்க நம்பிக்கை என்ன என்று உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொண்டு கேள்விகள் எழுப்பவும், அப்போது தான் சத்தியத்தை அறிந்து கொள்ள நம்மால் முடியும், அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தின் மேல் நீங்கள் கொண்ட கசப்பை இங்கு கொட்டித் தள்ளாதீர்கள். சத்தியத்தை அறியும் நோக்கில் பண்புடன் நடந்து கொள்வோம்.

"இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானது, அது மூடநம்பிக்கையல்ல...!"